பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

662
தாயினும் நல்ல தயாளுவே நின்னைஉன்னித்
தீயின்மெழு கொத்துருகுஞ் சிந்தைவரக் காண்பேனோ.
     (பொ - ள்) பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிவுடைய கருணையாளனே, நின்திருவடியினை மெய்யன்பால் நினைந்து தீயின் முன் மெழுகு போன்று இயல்பாகவே உருகு மனம் எனக்கு உண்டாகவுங் காண்பேனோ?

(15)
 
என்செயினும் என்பெறினும் என்னிறைவா ஏழையன்யான்
நின்செயலென் றுன்னும் நினைவுவரக் காண்பேனோ.
     (பொ - ள்) மீளா அடிமையாகிய யான் இவ்வுலகில் எச்செயலைச் செய்தாலும் எப்பொருளைப் பெறினும், அடியேனின் முதல்வனே அவையனைத்தும் நின்செயலே என்று நினைக்கும் நினைவு வரக்காண்பேனோ?

(16)
 
எள்ளத் தனையும் இரக்கமிலா வன்பாவி
உள்ளத்தும் எந்தை உலவிடவுங் காண்பேனோ.
     (பொ - ள்) பிறவுயிர்களிடத்துப் பெரிதாகக் கொள்ளவேண்டிய இரக்கத்தில் சிறிய எள்ளளவுதானும் இரக்கங் கொள்ளாத யான் கொடிய பாவி; பாவியாகிய என் உள்ளத்திலும் எந்தையே! நீ உலாவுதல் செய்யவுங் காண்பேனோ?

(17)
 
வஞ்சகத்துக் காலயமாம் வல்வினையேன் ஆகெடுவேன்
நெஞ்சகத்தில் ஐயாநீ நேர்பெறவுங் காண்பேனோ.
     (பொ - ள்) உலகில் நடக்கும் வஞ்சகங்கள் அனைத்திற்கும் இருப்பிடமாகக் காணப்படும் கடிய வினையையுடைய எளியேன் ஐயோ கெடுவேன்; என் நெஞ்சினுள் ஐயனே நேராக வரப்பெறவுங் காண்பேனோ?

(18)
 
தொல்லைப் பிறவித் துயர்கெடவும் எந்தைபிரான்
மல்லற் கருணை வழங்கிடவுங் காண்பேனோ.
     (பொ - ள்) தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் பிறவிப் பெருந்துன்பம் நீங்கி ஒழியும்படி எந்தையாகிய சிவபெருமானின் அளவிடப்படாத பெருங்கருணை வழங்கியருளவுங் காணப்பெறுவேனோ?

(19)
 
வாளாருங் கண்ணார் மயற்கடலில் ஆழ்ந்தேன்சற்
றாளாக எந்தை அருள்செயவுங் காண்பேனோ.
     (பொ - ள்) வாள்போலுங் கூரிய கண்களையுடைய மையல் மாதர் என்னும் மயக்கப் பெருங்கடலில் ஆழ்ந்து கரையேற முடியாதபடி தத்தளிக்கும் எளியேன் சிறிதளவேனும் ஆளாகும்படி எந்தை திருவருள் செய்யவுங் காண்பேனோ? சற்று - சிறிது.

(20)