நன்கறிதல் கூடுமாதலால் ஈண்டு ஆசிரியர் "சித்தாந்த முத்திமுதலே" என்று விதந்தெடுத்தோதினர். சித்தாந்த மெய்ந்நூல்கள் சிறந்த செந்தமிழ் மொழியின்கண்ணே திருவருள் உந்துதலால் முகனூல்களாகத் தோன்றியுள்ளன. அவற்றைப் போன்று வடமொழி நூல்கள் மருளொளித்துத் தெருளுணர்வுதரும் திறப்பாடுள்ளனவல்ல. திறப்பாடுள்ள தனித்தமிழ் நூல்கள் வருமாறு :
சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம், தத்துவ விளக்கம், ஞானாமிர்தம், துகளறு போதம்; இன்னும் இவைபோன்ற மற்றவையுமாம்.
இவற்றுள் சிவஞானபோதம் தனித்தமிழ் விழுமிய முழுமுதல் நூலாகும். சிவானசித்தியார் அதன் வழிநூலாகும். ஏனையவை சார்பு நூலாகும்.
போக்குவரவு அற்றபொருள் என்பதை அழியாமையும் அசையாமையும். வேறுபடாமையும் மிகப்பெரியதும் ஆனபொருள். இதனை நித்திய நிர்ச்சல நிர்விகாரமான பரப்பிரமப் பொருள் என்பதாம்.
ஆருயிர்கட்குப் பேருயிராகிய சிவபெருமான் உடனின்று விளக்க விளங்கும் அறிவுள்ள தன்மையால் அவன் திருமாமறை முறைகளாகிய இறை நூல்களைத் திருவாணை வழியாகத் தோற்றுவித்தருளினன். இவ்வுண்மை வருமாறுணர்க :
| "அருவுருவந் தானறிதல் ஆயிழையாய் ஆன்மா |
| அருவுருவ மன்றாகும் உண்மை - அருவுருவாய்த் |
| தான்றியுடன் நில்லாது தோன்றாது நில்லாது |
| தோன்றன் மலர்மணம்போற் றொக்கு." |
| -சிவஞானபோதம், 7 - 3 - 1. |
(உயிர்க்கு அறியுந்தன்மை உண்டாகலான் அன்றே வேதாகம முதலிய நூல்களுளவாயின என அதனை வலியுறுத்துவார் ஆயிழையாய் ஆனமாவென அதனை உடம்பொடுபுணர்த்தோதினார் இக் கருத்தே பற்றிப் "பலகலையுலகி (சிவப்பிரகாசம்) னிலவுதலானும்" என்றார் புடைநூல் ஆசிரியரும். (சிவஞான முனிவரனார் பேருரை).
(4)
ஐந்துவகை யாகின்ற பூதபே தத்தினால் | ஆகின்ற ஆக்கைநீர்மேல் | அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான் | அறியாத காலமெல்லாம் | புந்திமகி ழுறவுண் டுடுத்தின்ப மாவதே | போந்தநெறி என்றிருந்தேன் | பூராய மாகநின தருள்வந் துணர்த்தஇவை | போனவழி தெரியவில்லை |