12

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

  திருஞானசம்பந்தார்பிள்ளைத் தமி்ழ்க் காப்புப் பருவத்தில் திருநீறு, சிவன் சத்தி பற்றிய பாடல்களையும், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் சிவபெருமான், முப்பத்து முக்கோடி தேவர்கள் பற்றிய பாடல்களையும், மங்களாம்பிகை பிள்ளைத் தமிழில் காப்புப் பருவத்தில் வரும் அமுதகும்பேசர் பற்றிய பாடலையும், பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத் தமிழில் வரும் காப்புப் பருவத்தில், அழைத்து வாழ்வித்த பெருமான் பற்றிய பாடலையும் காட்டலாம்.

    பெண்ணிற்குரிய சிறப்புப் பருவங்களாகிய கழங்கு அம்மானை, ஊசல் பருவங்கள் மூன்றனுள் அம்மானை, ஊசல் அமைந்த பருவங்களே அமையப் பிள்ளைத் தமிழ் நூல்கள் பாடப்பட்டுள்ளன. கழங்கு பருவத்திற்கு ஈடாகப் பெண்பால் பிள்ளைத் தமிழ் நீராடல் பருவம் அமையப் பாடப்பட்டுள்ளது.

    நச்சினார்க்கினியர்,  “ குழவிமருங்கின் கிழவதாகும் “  என்னும் தொல்காப்பிய நூற்பாவின் விளக்க உரையின் ஆண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்களையே சுட்டிக்காட்டினர். பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய ஈற்று மூன்று பருவங்களைக் குறித்திலர். இதனால் அவர் காலத்தில் பெண்பால் பிள்ளைத் தமிழ் நூல் பத்துப் பருவங்கள் உள்பட பாடப்படவில்லை என்று ஒருவாறு ஊகிக்கலாம்.

    பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய கரு நமது பழைய இலக்கியங்களில் உண்டு என்பதை மறக்கக்கூடாது. சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு நூல். அந்நூலில் அம்மானை, ஊசல் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.

அம்மானை தம்கையில் கொண்டங் கணிஇழையார்

தம்மனையில் பாடும் தகையேல்ஓர் அம்மானை

தம்மனையில் பாடும் தகைமைஎலாம் தார்வேந்தன்

கொம்மை வரிமுலைமேல் கூடவே அம்மானை

கொம்மை வரிமுலைமேல் கூடில் குலவேந்தன்

அம்மென் புகார்நகரம் பாடேலோர் எம்பாவாய்

என்பது அம்மானைப் பருவத்துற்குரிய பாடல்.