New Page 1

8

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

சைவர்கள் ஆதலின் வீர சைவப் பெரியார்னளையும் காப்புப் பரவத்தில் இயைத்துப் பாடியுள்ளனர்.

   திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் பாடிய திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமி்ழில் பிரமீசர், திரு நிலைநாயகி, திருநீறு, கான்மாறி ஆடிய கடவுள், சிற்சக்தி விநாயகக் கடவுள், முருகக் கடவுள், திருப்பொய்கை (சீர்காழிப் பிரம்ம தீர்த்தம்) பன்னிருதிருப் பெயர்ப் பழம்பதி (சீர் காழித்தலம்) திருப்திகம், சட்டைநாதர் மற்றைத் தெய்வங்கள் ஆகிய இவர்கள் காக்க எனப் பதினொரு பாடல்களுடன் காப்புப்பருவம் திகழ்கின்றது.

   ஈண்டு ஸ்ரீ மாசிலாமணி தேசிகர் திருமால் முதலிய தேவர்கள் திருஞானசம்பந்தரைக் காக்க எனக் கூறாமல்

    “ திருமுத்தின் சிவிகைமிசை அசையவரு மணியைச்

     சேவித்தங் குடன்வருவர் “

 என்று பாடி இருப்பதை நன்கு சிந்திக்கவும். இதன் குறிப்பு, திருமால், பிரமன் முதலானவர் திருஞான சம்பந்தரைப் போற்றும் தகுதியினரே அன்றிக் காக்கும் தன்மையர் அல்லர் என்பதாகும்.

   திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடியுள்ள திருப்போரூர்ச் சந்நிதி முறையில் அடங்கியுள்ள திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் திருமால், சதாசிவன், பராசக்தி, விநாயகர், திருநீறு, உருத்திராட்சம், பஞ்சாட்சரம், திருமகள், சரஸ்வதி, பல தேவர் ஆகியோர் காக்க எனப் பத்துப் பாடல்களைக் கொண்டு காப்புப் பருவம் இலங்குகின்றது.

   காஞ்சிபுரம் ஸ்ரீ சிதம்பர முனிவர் படியுள்ள ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத்தமிழ் நூலில், விஷ்ணு, பரமசிவம், உமையம்மை, விநாயகர் வயிரவர், வீரபத்திரா, பிரமன், காளி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகிய பத்துத் தெய்வங்கள் காக்க எனப் பத்துப் பாடல்களைக் கொண்டு காப்புப் பருவம் திகழ்கின்றது.