24 இசை நாடகத்தின் மற்றொரு வகை ஒரு சிலரே பல வேடங்களை அவ்வந் நிகழ்ச்சிக்குரியதாகப் புனைந்து கொண்டு ஆடிப்பாடி நடிப்பதும் அவர்கள் பூண்டுள்ள வேடங்களைச் சூத்திரதாரனாக ஒருவன்வந்து விளக்கிச் சொல்வதும். திரைமறைவிலிருந்து கொண்டு விளக்கிச் சொல்வதுமாகும். இசை நாடக இலக்கியம் இசை நாடக இலக்கியம் என்பது மேற்கூறிய இசை நாடக இலக்கணக் கூறுகளையுடையதாக அமைந்து கண்ணாற்கண்டும் செவியாற்கேட்டும் சுவைத்துணர்வது போல மனத்தின் வாயிலாக உணரும் முறையில் செய்யுள் வகை-பாட்டு வகைகளினால் அமைக்கப் பெறுவதாகும். அவை இலக்கியமாகப் படித்துச் சுவைக்க மட்டும் உரியனவாகவும், நடித்துக் காட்டுவதற்கும் உரியனவாகும் திகழும். படித்துச் சுவைப்பதற்கு மட்டும் உரியவை நாடகத் தமிழ் எனவும் நடித்துக்காட்டுதற்கு உரியவை தமிழ் நாடகம் எனவும் கூறப்படும். அஃதாவது நாடகப்பாங்கில் அமைந்த தமிழிலக்கியம் என்பதும் தமிழ்மொழியால் ஆக்கப் பெற்ற நாடகக் கலை என்பதும் அவற்றின் பொருளாகும். சில படைப்புக்கள் இரண்டற்கும் பொதுவாகவும் அமையும். சிலப்பதிகாரம் போன்றவை நாடகத் தமிழ் நூல்களாம். தமிழ் நாடகமாக அமைந்த தொன்னூல்கள் யாதும் கிடைக்கவில்லை. பிற்காலத்து நாடகக் குழுவினரால் அமைந்த நாடகங்கள் தமிழ் நாடகம் என்பதற்கு ஏற்கும். மனோன்மணீயம் போன்றவை பொதுவானவை. இவ் இராமநாடகம் நாடகத்தமிழ்க் கூறுகளைக் குறைவாகக் கொண்டதொரு தமிழ் நாடக நூலாகும். மற்றும் சிறந்த இலக்கியகளுள் நாடகக் கூறுகள் பல அமைந்திருக்கும். கம்பராமாயணம் போன்றவை நாடகக் கூறுகள் சிறந்துள்ள இலக்கியங்களாகும். கம்பராமாயணம் சிறப்பாக விளங்குதற்கு அஃதொரு காரணமாகும். சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையை நோக்குமிடத்துக் கடைச் சங்ககாலத்தும் அதற்கு முன்பும் தமிழ்நாடக நூல்கள் பல இருந்திருக்க வேண்டுமென்று தெரிகின்றது. இயற்றமிழ் இலக்கியம் படைத்தற்குரிய நெறியைச் சுருக்கமாகக் கூறும் தொல்காப்பியத்துள் இலக்கிய ஆக்கத்திற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டியவை என்று கூறுமிடத்து முதல், கரு, உரி என்ற மூன்றும் அடிப்படையானவை என்கின்றார் ஆசிரியர். அவற்றுள் முதற் பொருளும் கருப்பொருளும் நாடகத்திற்குரிய பின்னணிகளேயாகும். கருப்பொருள்களுள் யாழ், பண்ணிசைகள், பறை ஆகியவை கூறப்படுகின்றன. ஊடல் தணிக்கும் வாயில்களாகவும் பாடாண்திணைக் கண் பரவலும் புகழ்ச்சியும் செய்தற்குரியாராகவும் பாணர், பாடினி, கூத்தர், பொருநர் விறலி ஆகியோர் கூறப்படுதலும் மெய்ப்பாட்டியலுள் எண்வகை மெய்பாட்டிற்குரியனவாகக் கூறப்படும் பொருள்களுள் பெரும்பான்மை நாடகப் பாங்கினவாக இருத்தலும் நோக்கத் தமிழ் நாடகக்கலை நூல்கள் அவர் காலத்தில் பெருவழக்கத்திலிருந்தாலன்றித் தொல்காப்பியம் போன்றதொரு நூல் தோன்றுதற்கியலாது என்பதை நன்குணரலாம். |