27 காண்டங்களாகப் பகுத்துக் கொண்டு படலச் செய்திகளை நாடக அமைப்பிற்கேற்பப் பகுத்துக்கொண்டு பாத்திரங்களின் கூற்றாகவும் கவிக் கூற்றாகவும் தலைப்பிட்டு விருத்தங்களாலும் கீர்த்தனைகளாலும் இரண்டடி இசைக் கண்ணிகளாலும் அவற்றை அமைத்துள்ளார். கம்பராமாயணத்தில் சில படலங்கள் குறைவான கதை நிகழ்ச்சியையும் மிகுதியான வருணனைகளையும் கொண்டிருத்தலின் அவற்றைத் தவிர்த்துக் கதை நிகழ்ச்சிகளையே தேர்ந்து சிலபடல நிகழ்ச்சிகளை ஓரிரு தலைப்புக்களிலும் சில படல நிகழ்ச்சிகளை நாலைந்து தலைப்புக்களிலும் அமைத்துப் பாடியுள்ளார். கம்பர் தனது இராமாயணத்தை இராமாவதாரப் போர் என்று பெயரிட்டு அதற்கேற்பப் போர் நிகழ்ச்சிகளுக்கே சிறப்பிடந்தந்து ஏறத்தாழச் செம்பாதி பாடல்களை யுத்தகாண்டத்தில் கூறியுள்ளார். அவரை அப்படியே பின்பற்றிய இவ்வாசிரியரும் யுத்தக் காட்சிகளுக்கு செம்பாதி ஒதுக்கித் தம் நூலைச் செய்துள்ளார். யுத்த வருணனைகள் காப்பியப்பாங்கில் அமைத்திருப்பதும் கருதத் தக்கது. ஆசிரியர் இராம நாடாகக் கீர்த்தனை என்று பெயரிட்டிருப்பினும் இதனைக் கீர்த்தனைகளாலான இராமநாடகம் என்ற முறையிலும் அமைக்காமல் இராம நாடகத்திற்கு உரிய கீர்த்தனைகள் என்று கொள்ளுமாறு அமைத்துள்ளார். ஆதலின் அங்கம் களம் காட்சி என்றாற்போன்ற நாடக உத்திகளை மேற் கொள்ளாமல் காப்பியத்திற்குரிய உத்திகளை மேற்கொண்டுள்ளார். அம்முறையில் வழிபடு கடவுள் ஏற்புடைக் கடவுளர்க்கு வணக்கங் கூறிப்பின்னர் நூற்பெருமையும் அவையடக்கமும் மங்கல வாழ்த்தும் கூறி அப்பகுதியைப் பாயிரம் என்று அமைத்துள்ளார். பயனை நூலிறுதியிற் கூறுகின்றார். பாலகாண்ட முதலாகக் கதை நிகழ்ச்சி தொடங்குகின்றது. காப்பிய நெறிக்குரிய நாட்டுப்படலம், நகரப்படலம், ஆற்றுப்படலம் என்றாற் போன்ற முன்னுரைகளின்றித் தசரதச்சக்கரவர்த்தியின் ஆட்சியும், ஆட்சி சிறப்பும் பற்றி முதற்கண் கூறித் தொடங்குகின்றார். அங்ஙனம் தொடங்குகின்றவர் முன்னதாக நாடக நூலுக்குரிய முறைமையை ஒட்டித் தோத்திரமாக இராமபிரான் திருவடிகள் துணை செய்தருள வேண்டுமென்று தோடயம் பாடித் தொடங்குகின்றார். தோடயம் முடிந்ததும் இது நாடக நூல் என்னும் உணர்வு தோன்றக் கட்டியம் கூறுகின்றார். இந்நூலுள் இக்கட்டியம் மட்டுமே வசன நடையில் அமைந்துள்ளது. நூலிறுதியில் வாழ்த்தும் பயனும் கூறிப் பாயிரத்துள் வரும் மங்களத்தையே கூறிக் கொள்ளுமாறு அமைத்துள்ளார். யாப்பமைதி ஒவ்வொரு கீர்த்தனை, திபதை ஆகியவற்றிற்கு முன்கதை நிகழ்ச்சியின் தொடர்பு தோன்றும் முறையில் பெரும்பான்மையும் ஆசிரிய விருத்தங்களையும் சிறுபான்மை கொச்சகக்கலி கலித்துறைவஞ்சி விருத்தங்களையும் அமைத்துள்ளார் வெண்பா பாயிரத்துள் மட்டுமே இடம் பெற்றுள்ளது ஆசிரிய விருத்தங்களுள் சில தாளக் கட்டமைந்த சந்த விருத்தங்களாக அமைந்துள்ளன. ஓரிரு இடங்களில் கீர்த்தனைகளின்றி விருத்தம் மட்டும் அமைந்துள்ளது. கீர்த்தனைகள் தரு என்ற பெயரில் அமைந்துள்ளன. தருக்கள் பல்லவி, அநுபல்லவி சரணம் |