3

பல தனிப் பாடல்களும் சிறுசிறு பிரபந்தங்களும் செய்து கொடுத்து அவரை
மகிழ்வித்து வந்தார்.

கவிராயர் தனது விருப்பமாகச் சீகாழிக் கோவை, சீகாழித்தலபுராணம்;
அனுமார் பிள்ளைத்தமிழ் அசோமுகி நாடகம் முதலியவற்றை இயற்றினார்.
அக்காலத்தில் சீகாழியை அடுத்த சட்டநாதபுரத்தில் வாழ்ந்து வந்த
வேங்கடராமையர், கோதண்டராமையர் என்பவர்கள் இவரிடம் பிரபந்தங்களும்
இராமாயணமும் பாடங்கேட்டு வந்தனர். அவர்கள் இருவரும் சிறந்த சங்கீத
வித்துவான்களாதலின் கவிராயரிடத்தில் இராமாயணம் பற்றிக் கீர்த்தனைகள்
பாடித்தரும்படிக் கேட்டுக்கொள்ள இவரும் சில பாடல்கள்அவர்களது
இசைத்துணையோடு பாடிக்கொடுக்க அவர்களும் அவற்றை மேடையில்பாடி
வந்தனர். மக்களிடம் அப்பாடல்களுக்கு மிக்க வரவேற்பு இருந்தமையால் அவ்
இசைப்புலவர் இருவரும் இராமாயணம் முழுவதையும் கீர்த்தனை வடிவத்தில்
பாடியருளின் அது உலகவருக்குப் பெரிதும் பயனளிக்கும் என வேண்டிக்
கொண்டனர்.

கவிராயரும் தன் புலமையும் இறைபக்தியும் புலப்பட நல்லதொரு
காவியம் செய்ய வேண்டுமென்று எண்ணி வந்தாராதலின் அதற்கேற்ற
பொருளையும் பாவகையையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
இராமாயணம் உலகில் பரவியுள்ள ஒரு தெய்வத்தன்மையுடைய கதை
திருக்குறள் நீதிகளை கதைவடிவில் விளக்கும் ஒரு சிறந்த இதிகாசம் என்பது
இவரது உள்ளடக்கிடக்கையாக இருந்தமையாலும் தமது மாணவர்களும்
அதனையே குறிப்பிட்டு வேண்டுதலானும் இராமகாதையைப் பாமரமக்களும்
புரிந்து உவக்குவண்ணம் பாடிப்புனைய முடிவு செய்தார். கம்பர் அதணை
விருத்தப்பாவாலும் பாலபாரதி அதனைத் திருச்சந்த விருத்தங்களினாலும்
பாடிச் சென்றமையால் தம் மாணவர்கள் விருப்பத்திற்கேற்பக் கீர்த்தனை
வடிவில் இயற்றச் சித்தமானார்.

இராம காதையில் முக்கியமான இடங்களைத் தேர்ந்து பல
கீர்த்தனைகளை இயற்றினார். அவற்றைப்பிரசங்கமும் செய்தார். தம்
மாணவர்களின் துணையால் இசைத்தமிழில் வேண்டுமளவுக்குப் புலமையும்
பெற்றார். பின்னர்க் கீர்த்தனைகளைத் தொகுத்து ஒன்றனோடு ஒன்றைத்
தொடர்பு படுத்தும் வகையில் இடைஇடையே விருத்தங்களை அமைத்துக்
கீர்த்தனைக் காவியமாகக் கதாகாலட்சேபம் செய்வதற்கும் மேடையில்
நடிப்பதற்கும் ஏற்பப் போர் நிகழ்ச்சிகளையும் போர்களக் காட்சிகளையும்
சேர்த்துத் தனது நூலை உருவாக்கினார். இசைப்புலமை சான்ற தனது
இருமாணவர்களும் இராம நாடகக் கீர்த்தனைப் பாக்களைப்பலவிடத்தும்
பாடிப் பரப்பினார். சென்னையில் வாழ்ந்த செல்வர் பலர் அதனைப்
போற்றினர் அம்மாணவர்கள் நிறையப் பரிசுகள் பெற்று அவற்றைக்
கொண்டே அவரிருவரும் சிறப்பாகத் திருணம்செய்து கொண்டு வாழ்ந்தனர்.

இவற்றையெல்லாம் கண்ட கவிராயர் பின்னும் சிலநிகழ்ச்சிகளைப் பாடிச்
சேர்த்து அவ்வித்துவான்கள் துணையோடு தக்க இராக தாளங்களை அமைத்து
அரங்கேற்றுதற்கு முற்பட்டார். கம்பர் தனது இராமாயணத்தைத்
திருவரங்கத்துப் பெருமாள் சந்நிதியில் முதற்கண் அரங்கேற்றினார். என்ற
வரலாற்றை எண்ணித்தானும் தன்நூலை முதற்கண் திருவரங்கத்தில்
அரங்கேற்ற விரும்பி அங்குச் சென்று கோயில் துறையினரிடம் தனது
விருப்பத்தைத் தெரிவித்தார்.