31

தோடயம்
     தொடக்க இசைப்பாடல் என்பது இதன்பொருள். தொடு தொடக்கம்,
தொடங்கு என்பவற்றின் அடியாகிய தொடு என்பது இசைக்குரிய குறியீட்டுப்
பெயராகிய இயம் என்பதனோடு ஒருசொல் நீர்மைத்தாய்த் தோடயம் என
அமைந்தது. இயம்பல் என்பது குரலிசையையும் இயங்கல் என்பது கருவி
இசையையும் குறித்தலான் இயம் என்பது இசைக் குறியீடாக அமைந்தது.
இவ்வாறே இயல் என்பது இயற்றமிழ்க் குறியீடாகவும் இயன் என்பது
நாடகத்தமிழ்க் குறியீடாகவும் அமைந்தன. தொடை+இயம்=தோடயம் எனினும்
ஓக்கும். இது நான்கடி கொண்ட தாழிசையாய் எதுகை மோனைநயத்துடன்
இரண்டாமடியில் தனிச் சொல்போல ஒரு தொங்கலைக் கொண்டு நிகழும்.

கட்டியம்

   
ஒன்றனைக் குறிப்பிட்டுக் காட்டி இசை நயம்படக் கூறுதல் (காட்டு+இயம்)
கட்டியம் என்றாயிற்று நாடகக் கதையை இயக்குவோன் (சூத்திரதாரன்)
காட்சியின் தொடக்கத்தில் வரும் நடிகர்களைச்சுட்டி விளக்கிச் செல்வது
இதன் பயன் இது இசையோடு கூடிய வசனமாக அமையும் இராம நாடகத்தில்
இதுவொன்றே வசனமாக அமைந்துள்ளது.

விருத்தம்


     வட்டம் என்னும் பொருளில் செய்யுள் தொடங்குகின்ற முதலடியை
ஒத்து நான்கு அடிகள் அமைந்து மண்டிலமாக முடிதலின் விருத்தமாயிற்று
என்பர். ஓரடி நான்கு சீரிலும் மிக்குப்பல சீர்களைக்கொண்டு விரிந்து
முடிதலின் விருத்தம் எனத் தமிழ்ச்சொல்லாகவும் கொள்ளலாம். ஆசிரிய
விருத்தம் மட்டுமே ஆறும் அதற்கு மேற்கொண்ட சீர்களாலும் வரும்.
பெரும்பாலான ஆசிரிய விருத்தங்கள் ஆறுமுதல் எட்டுச் சீர்வரையுமே
அமைந்துள்ளன. இது, இயற்சீர் உரிச்சீர்களால் எதுகை மோனை இயைபு
ஆகிய தொடை நயங்களுடன் திகழும். கலிவிருத்தம் அடிக்கு நான்கு
சீர்களையும் வஞ்சிவிருத்தம் அடிக்கு மூன்று சீர்களையும் கொண்டு வரும்.

     கலித்துறை: ஐந்து சீர்கொண்ட நான்கடிகளான் வரும்

கொச்சகம்


     கலிப்பா வகையினுள் கொச்சகக்கலி என்பது ஒரு வகை கொச்சகக்
கலியுள் நான்குசீர்கொண்ட நாலடிகளான் துள்ளலோசைப்பட வருவது தரவு
கொச்சகம் எனப்படும். தரவு கொச்சகத்தை அடையின்றிக் கொச்சகம் என்று
வழங்குவர்.

கீர்த்தனை

     தெய்வங்களையும் தெய்வதன்மை பெற்ற அருள்பெற்ற
மேலோர்களையும் பற்றி அவர்தம் சிறப்புகளையும் விரித்துப் புகழ்ந்து பாடும்
இசைப்பாட்டு கீர்த்தனை எனப்படும். அவர்தம் நாமங்களை வரிசைப்படுத்திப்
பாடும் பாடல் நாமசங்கீர்த்தனம் எனப்படும்.