68

இராவணனிடம் தூதுசென்று அவனுடைய நயஉரையை எள்ளிக்கூறி புத்திமதி
சொல்லி மீண்டவன். போரில் இலக்குவனைத் தன்தோள் மீதமர்ந்து போரிடச்
செய்தவன். தந்தையின் சொல்லைத்  தலையேற்று இராமனிடத்தில் பெரும்பக்தி
பூண்டவன். மூலபல சேனையைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கிய சாம்பனுக்கும்
சேனைக்கும் அறிவுரை கூறி அவர்களின் அச்சத்தைக் களைந்தவன். இராமர்
பட்டாபிஷேகம் விழாவில் பங்கேற்று மகிழ்ந்தவன்.

நளன்

    வானரவீரன் சேது அணையைக் கட்டும்போது தலைமை தாங்கிக்
கட்டுவித்தவன்.

    நீலன், வசந்தன், ததிமுகன், குமுதன், மயிந்தன், துமிந்தன், சங்கன்,
முரபன், சரபன், சதவலி, சுதேஷணன், பதுமமுகன், தீர்க்கபாதன், பனசன்,
அட்சயன், கவயாட்சன், துன்முகன்,விருபாட்சன், இடபன் முதலானோர்
வானரப்படைத் தலைவர்களும் வானர வீரர்களுமாவார்.

சாம்பவன்

    பிரமபுத்திரன் கரடிகளின் தலைவன் அரசன் வானரர்களின் நண்பன். தன்
வலியைமறந்திருக்கும் போது அனுமானைத் தன் ஆற்றலை உணரச் செய்து
அவனை ஊக்குபவன். அனுமானுக்கு சஞ்சீவி உள்ள இடத்தைக் கூறிக்
கொண்டுவரச் செய்தவன். இராமனிடத்துப் பேரன்பு பூண்டவன்.சிறந்த
மதியூகி கல்விமான். நீண்ட ஆயுளுடையவன்.

சடாயு

    அருணனுக்குச் சேதி என்பவளிடம் சம்பாதியுடன் உடன்பிறந்தவன்.
கழுகுகளுக்கு அரசன் பேராற்றுலுடையவன் சம்பாதியால் அன்புடன் காக்கப்
பெற்றவன். தசரதனுக்கு உற்ற இடத்து உதவி அவனால் சகோதரனாக ஏற்றுக்
கொள்ளப்பெற்றவன். பஞ்சவடியில் இருக்கும்போது இராவணன் வஞ்சனையால்
சீதையை எடுத்துச் சென்றபோது அவனோடு போரிட்டு அவனது கவச
குண்டலங்களை அறுத்து வலிவிழக்கச் செய்தபோது அவன் சிவனுடைய
வாளால் எறிந்து வீழ்த்தப்பட்டவன். வீழ்ந்தபோதுஇராம இலக்குவர்
வருந்துணையும் உயிர்விடாமல் அவர்கள் வந்தபின் இராவணன் சீதையைத்
தூக்கிச்சென்றமையைக் கூறி இராமனின் கடுஞ்சீற்றத்தைத் தணித்துப் பின்
உயிர்விட்டவன். இராமனால் தந்தைக்குரிய இறுதிக்கடன் செய்யப்பெற்று
மோட்சடைந்தவன்.

சம்பாதி

    சடாயுவின் தமையன் இருவரும் அருணைனைக்காண ஆகாயத்திற்
பறந்து சென்ற போது சூரியனுடைய கிரணத்தால் சடாயு வருந்த அவனைக்
காக்க வேண்டி அவனுக்கு மேலே தன் சிறகுகளை விரித்துச்சென்றபோது
கதிரவனது வெப்பத்தால் சிறகு கரிந்து மயேந்திர மலையில் வீழ்ந்தவன்.
சீதையைத்தேடிச்சென்ற வானர வீரர்களின் ராமநாமக்கீர்த்தனத்தால் சிறகுகள்
வளரப்பெற்று அவைகளால் சடாயுவின் மறைவறிந்து பெரிதும் வருந்திக்
கலங்கப் பின் லோகசார முனிவரால் தேறி சீதையை இராவணன்
இலங்கைக்குக் கொண்டு சென்ற செய்தியை அனுமானிடம் கூறியவன். நீண்ட
ஆயுளையுடையவன்.