70

கொள்ளுமாறும் தான்பெற்ற இலங்கையைத் தருவதாகவும் கூறியழைத்த போது
மறுத்துச் செஞ்சோற்றுக்கடன் கழிப்பது என்கடமை. நீ ராமனிடத்தில் இரு
என வேண்டியனுப்பியவன். போரில் பலவானரர்களை அழித்துச்
சுக்ரீவனோடு மல்யுத்தம் செய்து அவனைத் தூக்கிச் சென்ற போது அவனால்
காதும் மூக்கும் கடியுண்டு அவ்வுறுப்புக்களை யிழந்தவன் இராமபாணத்தால்
உறுப்புக்கள் சேதமுற்று இறக்கும் தறுவாயில் தன்தலையைக் கடலில்
அவிழ்த்து விடுமாறும் தம்பியைக் காத்தருளுமாறும் வரம்வேண்டி வீரமரணம்
எய்தியவன் சிங்கக் கொடியையுடையவன் முற்பிறப்பில் மது கைடபர் என்னும்
இரட்டையருள் மதுவாகத் திகழ்ந்தவன்.

விபீஷணன்

     கும்பகருணனுக்குப் பின்பிறந்த இராவணன் தம்பி உத்தம
குணங்களையுடையவன் மதுமுதலியவற்றை உண்ணாதவன் பிரமனிடத்தில்
நெறிதவறாமல் வாழ வரம் பெற்றவன் தூதனைக் கொல்வது
அரசியலறத்திற்கும் நம் ஆண்மைக்கும் இழுக்குத் தருமென்று கூறி
அனுமனைத் தண்டித்து விட்டு விடுமாறு கூறியவன். இராமன் திருமாலின்
அவதாரம் சீதை இலக்குமியின் அவதாரம் என்று எடுத்துக்கூறிவிட்டுவிடச்
சொன்னவன் இறைவன் ஆற்றலை உணர்த்த பிரகலாதன் சரிதத்தை எடுத்துக்
கூறியவன். அவன் அறிவுரையைக் கேளாமல் வெகுண்டு துரத்திய போது
இராமனிடத்தில் அடைக்கலம் புகுந்தவன். இராமனால் இலங்கை அரசு தரப்
பெற்றவன் இராவணனுடைய ஆற்றலையும் படைபலத்தையும் இந்திரசித்துவின்
மாயையும் இராமலக்குவர்க்கு விளக்கிக் கொடுத்தவன். இந்திரசித்துவால்
வெட்டப்பட்டவன் மாயா சீதையென்று கண்டுவந்து சொல்லி நிகும்பலை
யாகத்தை அழிக்க இலக்குவனுக்குத் துணைநின்றவன் இராவணன் புற
முதுகிட்டவன் போலும் என இராமன் ஐயுற்ற பொழுது இராவணனின்
பேராற்றலை எடுத்துக்கூறி அவன் மாண்டதும் சகோதர பாசத்தால் அவன்
மீது விழுந்துபுலம்பி இறுதிக் கடன் செய்தவன் இலங்கை வெற்றிக்குப் பின்
சீதையை அலங்காரம் செய்வித்து இராமனிடத்தில் சேர்த்தவன் இராமர்
பட்டாபிஷேகத்தில் கலந்துகொண்டு மகிழ்ந்தவன்,சிரஞ்சீவிப் பட்டம்
இராமனால் அருளப்பெற்றவன்.

இந்திரசித்து

     இராவணனுக்கு மண்டோதரியிடம் பிறந்த வீரமகன். இவன்
பிறந்தபொழுது மேகங்களைப் போலமுழக்கமிட்டதனால் மேகநாதன் என்ற
பெயர் பெற்றவன். மேகத்தில் மறைந்து நின்று போரிடும் மாயையை
உடையவன். தேவர்களை எல்லாம் அடக்கித் தேவேந்திரனை வென்று
சிறைப்படுத்தியமையால் இந்திரசித்து எனக் காரணப் பெயர் கொண்டவன்.
அசோகவனத்தை அழித்த அனுமானைப் பிரமாஸ்திரத்தால் கட்டி இழுத்து
வந்தவன். இலக்குவனை நாகாஸ்திரத்தாலும் பிரம்மாஸ்திரத்தாலும்
வீழ்த்தியவன், அனுமான் காண மாயாசீதையை வெட்டி இராமன்
முதலானோரைக் கலக்கமடையச் செய்தவன். இராம இலக்குவர் தம் ஆற்றலை
உணர்ந்து சீதையை விட்டு விடும்படி இராவணனிடத்தில் பணிவோடு கூறவும்
அவன் கேளாமையால் போருக்குச் சென்று இலக்குவனால் தோளும்தலையும்
அறுப்புண்டு மாண்டவன், இராவணன் மகன் என்பதால் இராவணி என்பது
இவன் பெயர்.