71

அட்சயகுமாரன்

     இராவணனுடைய மக்களுள் ஒருவன் போராற்றலுடையவன்.
அனுமானோடு போரிட்டு மாண்டவன்.

அதிகாயன்

     இராவணன் மக்களுள் ஒருவன் பிரமனிடம் கவசம் பெற்றவன்.
பேராற்றல் உடையவன். இலக்குவானால் மாண்டவன்.

திரிசிரன்

     விசிரவசுவிற்கு கலை என்பவளிடம் பிறந்தவன். மூத்தலையுடையவன்.
சூர்ப்பநகையால் தூண்டப்பெற்று ஆரணியத்தில் இராமனோடு போரிட்டு
மாண்டவன்.

சம்புமாலி

     பிரகஸ்தன் குமாரன் இராவணன் ஏவலால் போரிட வந்து அனுமானால்
கொல்லப்பட்டவன்.

மாரீசன்

      சுநந்தனுக்குத் தாடகையிடம் பிறந்தவன். சுபாகுவின் சகோதரன்
இராவணனுக்கு மாமன்முறையுடையவன். விசுவாமித்திரனின் யாகத்தை
அழிக்க வந்தபோது இராமனுடைய வாயுவாஸ்திரத்தால் துரத்தப்பெற்றுக்
கடற்கரையிலிருந்து தவம் செய்தவன். இராவணனால் வற்புறுத்தப் பெற்று
மாயமானாக வந்து சீதையை மயக்கி இராம இலக்குவர்களைப் பிரித்தவன்.
இராம பாணத்தால்மாண்டவன்.

மாலியவான்

     சுகேசன் மகன் பிரமனை எண்ணித் தவம் புரிந்து பல வரங்களைப்
பெற்றவன். இராவணனுக்குப்பாட்டன் முறையுடையவன் இராமனுடைய
தெய்வத் தன்மையையும் பேராற்றலையும் எடுத்துக் கூறிச் சீதையைவிட்டு
விடும்படி இராவணனிடத்தில் கூறி அவனால் உதாசினம் செய்யப்பட்டவன்.

வன்னி
     மூலபல சேனைகளுள் புட்கரத் தீவிற்குரிய தலைவன்.
இராவணனைக்காத்த மூலபல சேனைகளுக்குத்தலைமை தாங்கிச்சென்று
போரிட்டு இராமனால் கொல்லப்பட்டவன்.

கரன்

     விசிரவசு முனிவனுக்கு இராகை என்பவளிடத்துப் பிறந்தவன்.
பெருவலிமையுடையவன்.சூர்ப்பநகையின் ஏவலால் ஆரணியத்தில்
இராமனோடும் போரிட்டு மாண்டவன். தூஷணன் திரிசிரன்ஆகியோர்
உடன்பிறந்தவன்.