84

இவ்விதிகாச நூலைச் செய்து போந்தனர் எனினும் வைகுந்தப் பெருமாளின்
அமிசமாக (அவதாரமாகக்)காப்பிய நயமெல்லாம் பொருந்தச் செய்யப்பெற்ற
வான்மீகியாரின் இராமாயணமே பெருவழக்காக அமைந்து திகழ்வதாயிற்று
இதனைத் தழுவியே பாரத நாட்டில் வழங்கும் பல்வேறு மொழிகளில்
இராமாயணங்கள் தோன்றலாயின.

     தமிழில் வான்மீகி இராமாயணத்திற்கு முன்னும் பின்னும் சில
இராமாயண நூல்கள் தோன்றிவழங்கின என்பது சங்க இலக்கியங்களில்
காணப்பெறும் குறிப்புக்களான் அறியக்கிடக்கின்றது.அவற்றுள் சில வருமாறு.

     “கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை
     வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
     நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
     செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாங்கு”   
                                            (புறநானூறு 378)
எனப் புறநானூற்றிலும்

     “வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
     முழங்கிவரும் பௌவம் இரங்கு முன்றுறை
     வெல்போர் இராமன் அருமறை கவித்த
     பல்வீழ் ஆலம் போல  

     ஒலியவிந் தன்றால் இவ்வழுங்கலூரே”   (அகநானூறு 70)

என அகநானூற்றிலும்

     தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற்
     றொன்முது கடவுட் பின்னர்மேய   (மதுரைக்காஞ்சி 40, 41)

என மதுரைக் காஞ்சியிலும்

     “வாங்குசிலை இராமன் தம்பி ஆங்கவன்
     அடிபொறை யாற்றினல்லது”

எனத் தொல் - பொருள் நூற் - 76 நச்சினார்க்கினியர் உரையிலும்

     “இருசுடர் வழங்காப் பெருமூதிலங்கை
     நெடுந்தோள் இராமன் கடந்தஞான்றை”

எனப் புறத்திரட்டு 1333ஆம் பாடலிலும் காணப்படும் குறிப்புக்களான்
சங்ககாலத்தில் இராமாயணநூல்கள் பல இருந்தமை அறியலாம். மேலும்
சிலப்பதிகாரத்தில் வரும் குறிப்புக்களாலும் இதனைஉணரலாம். மற்றும்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தம் பாசுரங்களிலும்
பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் நம்மாழ்வார்,
திருமங்கையாழ்வார் தம் அருளிச்செயல்களிலும் இராமாயண வரலாறு
பரக்கப் பேசப்படுவதைக் காணலாம்.