85 எனினும் தமிழ்மொழியில் பெருங்காப்பிய வடிவில் இராமவதாரப் போர் என்னும் இராமாயணஇதிகாசத்தை இயற்றிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் வான்மீகி இராமாயணத்தைத் தழுவியே தன்னூலைப் படைத்ததாகக் கூறுகின்றார். கூறினும் முகாமையான இடங்களில் தமிழகப் பண்பாடுஇலக்கிய நெறிகளைத் தழுவி வான்மீகத்தில் இல்லாத சில மாற்றங்களைச் செய்துள்ளமையைக் காணலாம். கம்பர் காலத்திற்கு முன்பே விட்டுணு புராணம், பாகவத புராணம் முதலியவை தமிழகத்தில்வழக்கிலிருந்தமையான் அவ்வழக்குகளையும் ஆழ்வார்களால் அருளப்பெற்ற பிரபந்தங்களையும் தழுவி இராமனையும் சீதையையும் வைகுந்த வாசனாகிய திருமாலும் அவன் தேவியாகிய திருவுமாகவேவிளக்குகின்றார். அதற்கேற்பப் பிற பாத்திரங்களையும் தேவர் குழமாகவே உணர்த்துகின்றார். இராமனைத் திருமாலவதாரமாகவே இளங்கோவடிகளும் கூறுவதைக் காணலாம். கம்பர் காலத்தை ஒட்டித் தெலுங்கிலும் கன்னடத்திலும் தோன்றிய இராமாயணங்களும் கம்பருக்குப் பின் தோன்றிய மலையாள இராமாயணமும் வான்மீகத்தைத் தழுவியமைந்திருக்கக்கம்பர் மிக முகாமையான இடங்களில் வேறுபட்டிருப்பதைக் காணலாம். காரணம் தமிழ்ப்பண்பாடும் தமிழ் இலக்கியப் பண்பாடும் ஆழ்வாராதியர் அருளிச் செயல்களுமேயாகும். மற்றும் சில ஆய்வாளர்களின் இராமாயணக் கதையின் மூல வரலாறு தென்னகத்திற்குரியதென்றும் கருதுகின்றனர். எனினும் இவற்றைக்குள்ள கதை வடிவம் வடபுலத்திற்கு முன்னுரிமை தருகின்றது. வரலாறு அயோத்தியில் தொடங்கித் தண்டகாரண்யம் கோதாவரி நதிக்கரை கிஷ்கிந்ததை மகேந்திரமலை இலங்கையெனப் பரவிப் பாரதநாடு முழுமைக்கும் உரியதாகத் திகழ்கின்றதைக் காணலாம். தமிழ்மொழியில் இராமாயண நூல்கள் யாப்பருங்கல விருத்தியுரையுள் இராமாயணம் பற்றிப் பஃறொடை வெண்பாவால் அமைந்தபாக்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை வீரசோழிய உரையாசிரியர் மேற்கோளாகத்தருகின்றார். அதனான் பத்தாம் நூற்றாண்டிற்கு முன் பஃறொடை வெண்பாவாலாகியதொரு இராமாயண நூல் இருந்தமை புலனாகின்றது. புறத்திரட்டு என்னும் தொகைநூலுள் ஆசிரியமாலை என்னும் பகுதியுள்இராமாயணம் பற்றிய சில பாக்கள் காணப்படுகின்றன. அதனான் ஆசிரியப் பாவானமைந்ததொரு இராமாயண நூல் இருந்தமை புலனாகின்றது. சைனமதச் சார்பான ஸ்ரீபுராணத்துள் சைன இராமாயணப்பாக்கள் சில காணப்படுகின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதப்பெறும் குணாதித்தன்சேய் என்பவரால் இயற்றப் பெற்ற காகுத்தன் கதை என்னுமொரு நூலை ச.வே. சுப்பிரமணியனார் குறிப்பிடுகின்றார். அருணாசலக்கவிராயர் காலத்திற்குமுன் வாழ்ந்த பாலபாரதி என்பவர் சந்தவிருத்தத்தால் ஓர் இராமாயண நூலை இயற்றியுள்ளார். தஞ்சை சுப்பிரமணியன் என்னும் புலவரால் இராமாயண வெண்பா என்றொரு நூல் இயற்றப்பெற்றுள்ளது. அரிகேசரி என்பவரால் இயற்றப்பெற்ற இரகுவம்சம் என்னுமொரு நூலும் விஷணுபாதசேகரர் என்பவரால் இயற்றப்பெற்ற இராமாயண சூடாமணியும் இராமாயணம் பற்றியதேயாகும். தருமலிங்க |