86

முதலியார் என்பவரால் இயற்றப்பெற்றுள்ள அமிர்த இராமாயணமும், 128
விருத்தங்களில் அமைந்துள்ள குயில் இராமாயணமும் நாராயணசாமி
அய்யரால் இயற்றப்பெற்றதொரு சுருக்கமான அகவற்பாவாலான
இராமாயணமும் இராசகோபால முதலியாரால் இயற்றப்பெற்றுள்ள இராமாயண
ஓரடிக்கீர்த்தனையும் குறிப்பிடத்தக்கவையாகும்.

     இனி நாட்டுப்பாடல் வடிவில் அமைந்துள்ள இராமாயண நூல்களுள்
பதினேழாம் நூற்றாண்டிற்கொங்குநாட்டில் வாழ்ந்த எம்பெருமான் கவிராயர்
என்பவரால் இயற்றப்பெற்றுள்ள தக்கைஇராமாயணமும் வைத்திலிங்கச்
செட்டியாரின் இராமாயணச் சிந்தும் திருமலைசாமி அய்யங்கார் இயற்றிய
இராமாயணக் கப்பல் நூலும் முத்துசாமிக் கவிராயர் என்பவர் இயற்றிய
இராமாயணக் கீர்த்தனைகளும் இராமசாமிக் கவிராயர் என்பவர் இயற்றிய
இராமாயணம் கும்மியும் இரத்தினசாமிமுதலியார் என்பவரால் இயற்றப்
பெற்றுள்ள இராமர் தாலாட்டும் முனிசாமி முதலியார் என்பவரால்
இயற்றப்பெற்றுள்ள இராவணன் கும்மியும் சீனிவாச அய்யங்கார் என்பவரால்
இயற்றபெற்றுள்ள இராமாயண ஏலப்பாட்டும் நாராயணசாமி பிள்ளை அவர்கள்
இயற்றிய இராமாயணக் காவடிச் சிந்தும் அழகிய சொக்கநாதப் பிள்ளை
அவர்கள் இயற்றிய இராமாயணக் கும்மியும் சடகோப அய்யங்கார் அவர்கள்
இயற்றிய இராமாயணச் சிந்தும் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் ஸ்ரீராமர்
தாலாட்டும்ஸ்ரீராமர் வனவாசமும் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பல
இராமநாடக நூலுக்குப்பின் தோன்றியவை.மேலும் 19, 20ஆம் நூற்றாண்டில்
தோன்றியவற்றுள் அரங்கசாமி செட்டியார் இயற்றிய இராமாயணத் திருப்புகழ்
கனகராச அய்யர் இயற்றிய இலங்கைப்பரணி வேம்பு அம்மாளின்
இராமாயணக் கீர்த்தனைகள் குறிப்பிடத்தக்கவை.

     இவ்விவரம் திராவிடமொழி இலக்கியங்கள் என்னும் நூலிற்
காணப்படுவதாகும்.

இராமநாடகச் சிறப்பு

     கதாகாலட்சேபம் செய்பவருக்குப் பெரிதும் பயன்படும் படியாகவும்
மேடைப்பாடகருக்கும் பயன்படும் படியாகவும் கவிராயர் அவர்கள்
இந்நூலைச் சுருக்கமாக இயற்றியுள்ளார். எனினும் தனதுபரந்த
கல்விப்பயிற்சியும் புலமை நலமும் தோன்ற காப்பியச் சுவைகள் நனிவிளங்க
மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார்.

     பன்னீராயிரம் பாடல்களால் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன்னூலை
இயற்றியுள்ளார். காப்பிய நயங்கள் சுவைகள் வருணனைகள் நிரம்பிய
தன்னூலில் உவமமுதலாய அணி நயங்கள், சொல்லணித் திறங்கள் சந்த
நயங்கள் முதலியவற்றைக் கையாண்டுள்ளார். அவையாவும் விளங்கக்
கவிராயர் தருக்களும் திபதைகளுமாப் புனைந்த நூற்றுத் தொண்ணூற்றேழு
கீர்த்தனைகளுள் அமைத்துள்ள திறன் போற்றத்தக்கதாகும்.
எடுத்துக்காட்டாகச் சில பகுதிகளைக் காண்போம்.