91 நாட்டியம், சதிர், தாண்டவம், ஆடல் என்பவை சிறுசிறு பொருள் வேறுபாடுடைய ஒருதுறைச்சொற்களாகும். நடிப்பென்பது மக்கள் தேவர் விலங்கு பறவை முதலிய உயிர்ப் பொருள்களின் தோற்றம், நடை, சாயல் முதலியவற்றைக் காண்போர் அகக்கண்ணாலும் புறச்செவியாலும் உணருமாறு செய்யும் ஒப்புநிலை விளக்கமாகும். ஒன்றைப் போலச் செய்தல் (நடத்தல்) நடிப்பாயிற்று. இந்நாட்டியம் உணர்த்துதற்கு எடுத்துக் கொண்ட நிகழ்ச்சிகள் பாத்திரங்களுக்கு ஏற்பஒருவராலும் இருவராலும் பலராலும் நடைபெறும். ஒவ்வொருவரும் ஒத்த ஒப்பனையாலும் வேறுவேறு ஒப்பனைகளாலும் தோன்றி ஆடும்பொழுது அது நாட்டிய நாடகம் எனப்படும். நாட்டிய நாடகம் என்பதுமுதற்சொற் குன்றி நாடகம் என்ற அளவிலும் வழங்கும் அதனான் நாட்டியப் பெண்டிரை நாடகமடந்தையர் என இலக்கியங்கள் சுட்டுகின்றன. பண்டைக் காலத்து நாட்டிய மகளிர் விறலி எனஅழைக்கப்பட்டனர். (விறல்- சத்துவம்-மெய்ப்பாடு) நாட்டிய நாடகங்களின் கதை நிகழ்ச்சிகள் காண்போர் தெற்றென உணர்ந்து சுவைத்தலைவேண்டி யாழ், குழல், முழவு முதலிய இசைக் கருவிகளைத் துணையாகச் சேர்த்து இக்கலை வளர்க்கப்பெற்றது. பின்னர் கதை நிகழ்ச்சிகள் மேலும் தெளிவாதற் பொருட்டுப் பாடல்கள்அமைத்து அவற்றை இசையொடு கூட்டி ஒருங்கு வெளிப்படுத்தி வருவாராயினர். அவ்இசைக்கும் தாளத்திற்கும் ஏற்ப ஆடுபவர் தாமே பாடுவதுபோல வாயசைப்பர். அப்பாடலை மகளிர்க்கே உரியதாக இருந்தமையின் வாரம் பாடுவோர் தோரிய மடந்தையர் எனப்பட்டனர். தலைமை தாங்கி நடத்தும் ஆசான் கஞ்சக் கருவியால் தாளமிட்டு இயக்குவர் அவர்க்கு நட்டுவனார் என்பது பெயர். இதனான்நாடகம் கருவியால் தாளமிட்டு இயக்குவர் அவர்க்கு நட்டுவனார் என்பது பெயர். இதனான் நாடகம் என்பது நட்டுவம் என்பதனடியாகப் பிறந்தது என்பது நன்கு விளங்கும். இசையையும் மெய்ப்பாடுகளையும் உள்ளடக்கி வடமொழியாளர் எல்லாப் பொருளையும் உள்ளடக்கி நிற்குமாறு பொருள் கூறுவர். அதனான் இதனை வடசொல் என மயங்குவாரும் உளர். நாட்டியம் என்பது ஒரு நாட்டவருக்கோ இனத்தவருக்கோ உரிமையுடைய கலையன்று அது மக்கள் எல்லோருக்கும் ஆண் பெண் இருபாலாருக்கும் உரிமையுடையதாகும். பொருந நாடகம் ஒரு நிகழ்ச்சியையோ, கதையையோ, வரலாற்றையோ, எடுத்துக் கொண்டு அவற்றை நிகழ்த்தியமாந்தர்களைப் போல ஒப்பனை செய்து கொண்டு அவற்றை நடித்துக் காட்டுவது பொருநநாடகம் எனப்படும். பொருநாடகம் பக்கவாச்சியங்களும் வாய்ப்பேச்சுமின்றி வினையங்களால் மட்டும் நடித்துக்காட்டப் பெறின் அதனை ஊமை நாடகம் என்பர். ஊமை நாடக நிகழ்ச்சிகளைக் காண்போர்தெளிவாக உணர்ந்து கொள்ளும் பொருட்டுத் திரைமறைவிலிருந்து விளக்கம் கூறப்படுவதுமுண்டு. பொருந நாடகத்தில் முத்திரைகளும் தாளச்சதிகளும் தவிர்க்கப்படும் உணர்வுகளைத் தெளிவுபடுத்தும் வகையில் பக்கவாச்சியங்கள் செயல்படும். வேடம் புனைந்து கொண்டு நடிக்கும் பொருநர் உரையாடல்களில் அவ்வவ் உணர்ச்சிகளை ஏற்றிச் சிறுபான்மை வினையங்களுடன் கருத்துக்களை வெளிப்படுத்துவர். |