93 மணிமேகலை, பெரியபுராணம் முதலியவற்றுள் சிறுபான்மையாக அமைந்துள்ளன. எனினும் இவை இயற்றமிழ்ப் பனுவல்களாகவே கொள்ளப் பெறுகின்றன. தமிழ் நாடகம் என்னும் வகையில் தொல்பனுவல்கள் யாதும் இன்றைக்குக் கிட்டவில்லை. சிலப்பதிகார உரையுள் பழந்தமிழ் நாடக இலக்கண நூல்கள் சில சுட்டப்படுகின்றன. நாட்டியநாடகம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதனால் தமிழ் நாடகநூல் பல இருந்திருத்தல் வேண்டுமென்பது புலனாகின்றது. தொல்காப்பியத்தில் நாடக இலக்கணக் கூறுகள் பல சுட்டப்படுகின்றன. “நாடகவழக்கிலும் உலகியல் வழக்கிலும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்” என்று அது கூறுதலாலும் செய்யுள் இலக்கியத்திற்கு அடிப்படைப் பொருளாகக் கூறப்படும் முதல்கரு உரி என்னும் மூன்றும் நாடகப்பாங்கில் அமைந்துள்ளமையாலும் கருப் பொருள்களுள் பண்ணும் யாழும் பறையும் கூறப்படுதலானும் நாடகநூல்கள் பல இருந்தன என்பது விளங்குகின்றது. மேலும் உரிப்பொருளுக்குரிய மாந்தர்களைக் கூறுமிடத்து. பாணர் பொருநர், கூத்தர், பாடினி விறலியர் என்னும் இசைநாடகக் கலைஞர்களைச் சுட்டுதலானும் மெய்ப்பாட்டியலுள் பண்ணைத் தோன்றிய எண்ணான்கு நாடகச் சுவைக்கூறுகளைக் கூறுதலானும் எண்வகை மெய்பாடுகள் நாட்டியக் கலைக்கும் உரியவாக விளங்குதலானும் நாடகநூல்கள் பலஇருந்தமைக்குச் சான்றாகின்றன. ஏறத்தாழ பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் தான் நாடக இலக்கியங்கள் தோன்றிவளர்ந்து வருகின்றன. இக்காலத் தமிழ் நாடகங்கள் பெரும்பான்மையும் ஐரோப்பிய நாடுகளில் தாக்கத்தால் ஆங்கிலத் துறையைத் தழுவி அமைவனவாயின. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் கூத்து என்ற முறையில் பாரம்பரியமாகச் சிலரால் புராண இதிகாச நிகழ்ச்சிகள், காப்பியக் கதைகள் நாடகவடிவில் இசைத் துணையோடு நடிக்கப்பெற்று வந்துள்ளன. அத்தொடர்ச்சி இன்றளவும் நிகழ்கின்றது. அரிச்சந்திர விலாசம், இரணிய நாடகம், சிறுத்தொண்டர் நாடகம் முதலியவை நாட்டுப்புறவிழாக்களில் இடம்பெற்று இன்றளவும் மறையாமல் நடைபெற்று வருகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தொழில் முறையில் நாடகக் குழுக்கள் தோன்றிநாடகக் கலைக்குப் புத்துயிரளித்தன. சங்கரதாசு சுவாமிகள் செய்யுள், பாட்டு நடையில் பலநாடகங்கள் படைத்தார். பம்மல் சம்பந்த முதலியார் போன்றோர் வசன நடையில் பலநாடகங்களைப் படைத்தனர். இன்றைக்கு அரசியல் சமுதாயத் தொடர்பான நாடகங்கள் பல தோன்றிவளர்ந்து வருகின்றன. நாடகம் பொதுமக்கள் கலையாகலின் என்றும் அதற்கு அழிவில்லை. இராமநாடகம் சீகாழி அருணாசலக் கவிராயரால் 18ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் உருவாக்கப்பெற்ற இவ்இராமநாடகம் இயற்றமிழ்ச் செய்யுள் வகையைச் சேர்ந்த விருத்தப் பாக்களைத் தொடக்கமாகக்கொண்டு பண்ணும் தாளமும் அமைந்த தமிழிசைப் பாக்களால் அமைந்துள்ளது. இது சிறுகாப்பியத் தகுதியுடையதொரு சிறந்த நூலாகும். இந்நூலின் அமைப்பு முறையால் இது நாடகத் தமிழ்ப் பனுவல் என்றும். தமிழ்நாடகப் பனுவல் என்றும் கூறுவதற்கு ஏற்புடையதாக அமைந்துள்ளது. இந்நூலாசிரியர் இதனை இராமநாடகக் கீர்த்தனை என்று வரைந்துள்ளார். |