94 எனவே ஆசிரியர் இதன் ஒருமுழு மேடைநாடக நூலாகவோ தனிஒரு காப்பிய நாடக நூலாகவோ கருதவில்லை என்பது புலனாகின்றது. இராமாயணக் கதையைத் கதாகாலட்சேப முறையில் விருத்தமும் கீர்த்தனையுமாக இயற்றிப் பாகவதர்கள் பாடி விளக்கம் சொல்லு முறையிலேயே முதற்கண் அமைத்துப்பின்னர் விரிவாக்கியிருக்கின்றார் என்பது அவர் வரலாற்று நிகழ்வுகளால் அறியக்கிடக்கின்றது. இசை நாடகமாக நடிப்பதற்கும் மேலும் சில காட்சிகளைச் சேர்த்து மேடைநாடக நடிப்பதற்கும் ஏற்றதாகவே அமைந்துள்ளது கீர்த்தனைகள் பல நாடகப் பாத்திரங்களின் நேர்க் கூற்றாகவும் சிலஆசிரியர் கூற்றாகவும் அமைந்து இசைநாடகக் காப்பியம் என்று கூறுவதற்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளது. இந்நூலில் யுத்தம் பற்றிய நிகழ்ச்சிகளும் பாத்திரங்களின் அறிமுகமும், நிகழ்ச்சிகளுமாக அமைந்துள்ளவையே ஆசிரியர் கூற்றாக அமைந்துள்ளமையான் மேடைநாடகப் பாங்குமிக்குள்ளது. இவர் காலத்தில் மகாராட்டிரக் கலைஞர்களின் பாணியில் தெலுங்கிலும் தமிழிலும் புராணஇதிகாசக் கதைகளும் அவற்றுள் வரும் கிளைக் கதைகளும் வரலாற்று வடிவமாகக் கீர்த்தனையாலும் இசையோடு கூடிய வசனங்களாலும் கதாகாலட்சேபங்கள் குறுநில மன்னர்கள் பெருநிலக் கிழார்கள் ஆதரவில் அவர்தம் இல்லங்களிலும் பொது மன்றங்களிலும் நடந்து வந்துள்ளமையும் அவர்களால் போற்றப் பெற்றுள்ளமையும் இவர் வரலாற்றின் மூலம் அறியலாம். இந்த இராமநாடகக் கீர்த்தனை இவரால் படைக்கப்படுவதற்கு முன் கீர்த்தனை வடிவில் நாடகநூல்கள் இருந்தனவாகத் தெரியவில்லை. இவ்வாசிரியர் காலத்திற்குப் பின் சரித்திரக் கீர்த்தனை நூல்கள் பல தோன்றியுள்ளன இவர் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில் புலமை பெற்றுக் கற்பனை வளத்தோடு கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றிருந்தமையான் அக்கால மக்களின் சுவையுணர்விற்கேற்பக் கதாகாலட்சேப முறையில் கீர்த்தனைகளாலான நூல் ஒன்றைச் செய்யவிரும்பிச் சில இசைவாணர்தம் துணையால் இசையறிவும் பெற்றிருந்தமையோடு தெலுங்கு மொழியையும் கற்றறிந்து நூல் செய்ய முற்பட்டுள்ளார். அந்நிலையில் எந்தக் கதையைத் தேர்ந்து கொள்வது என ஆராய்ந்த போது பண்டிதர் முதல்பாமரர் ஈறாக வாழும் மக்களைக் கவர்ந்த இதிகாசம் இராமாயணமே எனத் தேர்ந்து தெளிந்து இந்நூலைச் செய்வாராயினர் எனத் தெரிகின்றது. முத்தமிழ்க் கூறுகள் முழுமையாக அமைந்து திகழ்வது கம்பராமாயணமே எனத் தெளிந்து தான் சிறந்ததொரு சைவசமய மரபில் வந்தவராயினும் வைணவசமயத்தைச் சார்ந்த இராமாயாணத்தைத் தேர்ந்தனராவார். இவர் வடமொழி வான்மீகி இராமாயணத்தையும் தெலுங்கு ராமாயணத்தையும் நன்கறிந்தவராயினும் தனது இராமநாடக நூலுக்கு முதல் நூலாகத் தேர்ந்து அதன் அமைப்பினை அப்படியே முழுதும் தழுவிக் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கூறுவதோடு கம்பன் கையாண்ட உத்திகளோடு வருணனைகள் உவமங்கள் யாவற்றையும் தன் நூலுக்கு வேண்டிய அளவில் மேற்கொண்டு காண்டங்களையும் அவ்வாறே அமைத்துள்ளார். |