95

நூலமைப்பு

     கவிராயர் அவர்கள் தன்நூலைக் கம்பராமாயணத்தை ஒட்டிக்
காண்டங்களையும் படலங்களையும் மேற்கொண்டமையான் கதையின் முக்கிய
நிகழ்ச்சிகளை மட்டுந் தேர்ந்து கதை விளக்கமுறையில் தலைப்பிட்டு
விருத்தங்களையும் திபதைகளையும் தருக்களையும் இயற்றியுள்ளார். சில
படலச்செய்திகளை ஓரிரு தலைப்புகளிலும் சில படலச் செய்திகளை நாலைந்து
தலைப்புக்களிலும் அமைத்துள்ளார். இது மிகச் சுருக்கமானதொரு நூலாதலின்
படலச் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் விருத்தப்பாக்களில் சுருக்கமாகக்
கூறிக் கதைமாந்தர்களின் கூற்றுகளைத் தேர்ந்து கீர்த்தனைகளிலும்
திபதைகளிலும் அமைத்துப்பாடியுள்ளார்.

     கம்பர் தமது இராமாயணத்தை இராமாவதாரப் போர் என்னும்
தலைப்பில் செய்துள்ளமையால் போர்நிகழ்ச்சிகளுக்குச் சிறப்பிடம் தந்து
ஏறத்தாழப் பாதிப் பாடல்களை யுத்தகாண்டத்தில் கூறியுள்ளார். அவரைப்
பின்பற்றிய இந்நாடக நூலாசிரியரும் தனது நூலில் செம்பாதியை
யுத்தகாண்டத்திற்காக ஒதுக்கியுள்ளார். யுத்தம் பற்றிய வருணனைகளையும்
மிகுதியாகக் கூறுகின்றார்.

     இராமநாடகக் கீர்த்தனை என்று நூலுக்குத் தலைப்பிட்டிருப்பினும்
கீர்த்தனைகளாலான இராமநாடகம் என்ற முறையில் அமைக்காமல்
இராமநாடகத்திற்குரிய கீர்த்தனைகள் என்ற பொருள்படுமாறு பாடல்களை
இயற்றியுள்ளார். அங்கம் - களம் என்பது போன்ற நாடக அமைப்பினை இவர்
மேற்கொள்ளவில்லை காப்பிய நூல்களுக்குரிய முறைமையில் முதற்கண்
வழிபடுகடவுள், ஏற்புடைக்கடவுள், முதலானோருக்கு வணக்கங்கூறித்
தன்னூலைத் தொடங்குகின்றார். பின்னர் நூற்பெருமையும், அவையடக்கமும்
கூறுகின்றார். இறுதியாக மங்களம் கூறி அப்பகுதிக்குப் பாயிரம் என்று
தலைப்பிட்டுள்ளார்.

     பாலகாண்டம் முதலாகக் கதைப்பகுதி தொடங்குகின்றது. காப்பிய
நெறிக்குரிய நாட்டுப்படலம், நகரப்படலம், ஆற்றுப்படலம் முதலிய
முன்னுரைகள் யாதும் கூறாமல் நாடகப்பாங்கிற்குரிய வண்ணம் தசரதச்
சக்கரவர்த்தியின் ஆட்சியும் ஆட்சிச் சிறப்பும் பற்றி அரசியல் என்ற
தலைப்பில் கதையைத் தொடங்குகின்றார். முன்னதாக நாட்டிய நாடக
நூலுக்குரிய முறையை ஒட்டித் தோத்திரமாக இராமபிரான் திருவடிகள்
துணைபுரிய வேண்டுமென்று தோடயம் பாடித்தொடங்குகின்றார்.

     தோடயம் முடிந்ததும் இது நாடகநூல் என்னும் நினைவு தோன்ற
கட்டியங் கூறுகின்றார். இந்நூலுள் இக்கட்டியம் மட்டுமே வசனத்தில்
அமைந்துள்ளது. பாயிரத்துள் வரும் மங்களப் பாடலே நூல் நிறைவுக்கும்
உரியதாக அமைந்துள்ளது.

பாடல்களின் அமைப்பு

     ஒவ்வொரு கீர்த்தனைக்கும் முன்னதாகக் கதை நிகழ்ச்சிகள் தெளிவாகத்
தொடர்புபடுத்தும்முறையில் விருத்தப்பாக்களை அமைத்துள்ளார்.
விருத்தங்கள் பெரும்பான்மையும் ஆசிரியவிருத்தமாகவும் சிறுபான்மை
கலிவிருத்தம் வஞ்சி விருத்தங்களாகவும்