96

அமைந்துள்ளன. சில சந்தவிருத்தமாக அமைந்துள்ளன. சில இடங்களில்
கீர்த்தனையின்றி விருத்தங்களை மட்டுமே அமைத்துள்ளார். சில
கீர்த்தனைகளுக்கு முன்னர் தரவு கொச்சக்கலிப்பாக்களை அமைத்துள்ளார்.
வெண்பா பாயிரத்துள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. கீர்த்தனைகள்தரு என்ற
பெயரிலும் திபதை என்ற பெயரிலும் கூறப்பட்டுள்ளன. திபதை என்பதற்கு
இரண்டடிக்கண்ணிகளாலான பாடல் என்பது பொருள் (த்விபத=திபதை)

     கீர்த்தனைகள், பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற முறையில்
பெரும்பாலும் அமைந்துள்ளன.ஓரிரு கீர்த்தனைகள் அநுபல்லவியின்றியும்
அமைந்துள்ளன. சரணங்கள் மூன்றற்குக் குறையாமல் எட்டுசரணங்கள் வரை
அமைந்துள்ளன. திபதைகள் நான்கு முதல் பதினெட்டு வரை அமைந்துள்ளன.
மூலபலச்சண்டை என்னும் தலைப்பில் அமைந்துள்ள கீர்த்தனை 338
அடிகளைக் கொண்ட மிக நீண்ட சரணமாக அமைந்துள்ளது. போர்
நிகழ்ச்சிகள் பற்றிய கீர்த்தனைகளே அளவில் பெரிதாக உள்ளன
கீர்த்தனைகள் பல்வேறு இனிய சந்தங்களோடும் பல்வேறு தொடை
நயங்களோடும் வழியெதுகையமைந்தும் வருணனைகளோடு அமைந்துள்ளன.
அவற்றுள் சில எடுத்துக்காட்டுக்கள் வருமாறு:

எதுகைச் சிறப்புச்சந்தம்:-

     எனக்குன் இருபதம் நினைக்க வரமருள்
     இனித்த தசரதன் தனக்கு மகனெனும்
     மனத்தின் உடனவ தரித்து முனிவரன்
     மகத்தில் அரக்கியை வதைத்த - அரசே

                (பாயிரம் பெருமாள் தோத்திரம் - சரணம் 1)

     தேவிஇவள் ராமா - கௌதமன் - ஆவிஇவள் ராமா
     ஆவலினாற் பண்டுமேவல் மனங்கொண்டு
     அந்தரம் நாடிய இந்திரன் கூடிய - தேவி

                (பாலகாண்டம் தரு - 11)

     “கொத்திக் கொத்தி அடித்தானே - சடாயு ராசன்
     கொத்திக் கொத்தி அடித் தானே

     பத்துச்சி ரத்திலும் தாளிலும் தோளிலும்
     பற்றிக் கரத்தனில் மாரிலும் தேரிலும்
     தத்தித் தத்திப்பறந் தெத்தி எத்திக் கையால்
     குத்திக் குத்திஎங்கும் சுற்றிச் சுற்றி மூக்கால், - கொத்தி”
                               (அயோத்தியாகாண்டம் தரு - 12)