பக்கம் எண் :

103

 

களவு
 

 

கொடுவட்டி சூதுபொருள் இழப்பித்தல் களவே

210
நட்ட மேபிறர்க் கெய்திடச் செய்தலும் நம்பி
இட்டர் வைத்தநற் பொருளப கரித்தலு மிறப்ப
வட்டம் வட்டிகள் வாங்கலுஞ் சூதிற்பொன் பெறலும்
இட்ட வேலைசெய் யாதுகைக் கூலிகொள் ளியல்பும்.
 பிறருக்குப் பொருள் இழப்பு உண்டாக்கலும், நண்பர்கள் நம்பித்தந்த பொருளைத் தனதாக்கிக் கொள்ளலும், அளவுமீறி வட்டம் வட்டி வாங்குதலும், சூதாடிப் பொருள் சேர்த்தலும், வேலை செய்யாது கூலி பெறுதலும் களவாம்.
 நட்டம்-இழப்பு. வட்டம்-பணமாற்றக் கொடுக்கும் வாசி. வட்டி-பெற்ற முதலுக்கு கொடுக்கும் ஊதியம்.
 

3

 

கன்னம் பொய்காசு கைக்கூலி களவே

211
கன்னம் வைத்தசெல் லாப்பணம் வழங்குதல் கள்ள
மன்னு சீட்டையுண் டாக்குதல் கைலஞ்சம் வாங்கல்
என்னும் யாவுமே களவதா மித்தொழிற் கியைவோர்
மன்ன ராக்கினை வசைநர கடைந்துவா டுவரால்.
  கன்னம் வைத்தலும், செல்லாக் காசை வழங்கலும், கள்ளச் சீட்டுப் பிறப்பித்தலும், கைக்கூலி வாங்கலும் முதலிய எல்லாமும் களவாகும். களவு செய்வோர் வேந்தரால் தண்டிக்கப்படுவர். பழியும் நரகும் எய்துவர்.
  கன்னம்-மதில், பூட்டு முதலியவற்றைத் திறக்குங் கருவி. கைலஞ்சம்-கைக்கூலி.
 

4

 

களவால் விலங்கு, சிறை, காதற் பிரிவுண்டாம்

212
திலக வாணுதல் தேவியைச் சேயரைப் பிரிந்து
கலக லென்னவே யொலிசெய்மா விலங்குகாற் பூண்டிவ்
வுலகம் ஏசிடச் சிறையகத் துற்றுமண் சுமந்து
சிலுகெ லாமுறல் சிறிதுபொன் திருடலா லன்றோ.
  சிறுபொருட் களவால் மனைவியையும் மக்களையும் நீங்கி, கையிலும் காலிலும் இருப்பு விலங்கு பூண்டு, உலகோர் பழிக்கச் சிறைபுகுதல், மண்சுமந்து துன்புறல் முதலியன உண்டாகும்.