பக்கம் எண் :

126

 நீதிநூல்
 
 முறையுணர்ந்த நல்லறிஞர், அறிவிலார் செய்யும் பழியினை அவர் முன்னின்று கூறினும் அவரில்லாத இடத்துக் கூறார்.
 வடு-பழி. முதுகு-புறம்; இல்லாத இடம். விதி-முறை. விபுதர்-அறிஞர்.
 6
 
புறங்கூறுவோனைப் புறத்தாக்கல் கோன்முறை
268
ஒருவ னொருவன் குறையையுரைத்
  திடவே யதனைக் கேட்டோர்கள்
பெருக பத்தங் கலந்துபல
  பேருக் குரைக்க விவ்வாறே
மருவி யெங்கும் பரவுதலான்
  மண்ணின் முன்னம் தூறுமவன்
குருநோ யொப்பா னவனைக்கோ
  னூர்விட் டகற்றல் நன்றேயாம்.
 பிறன் குறையை ஒருவன் கூறினால், அதைக் கேட்டோர்கள் பொருந்தாதன மிகவுங் கலந்து பலபேருக்குக் கூறுவார்கள். இம் முறையாக உலகெங்கும் அது பரவும். ஆதலின், மண்மேல் முதலில் புறங் கூறுபவன் தொத்துப் பிணியாம் அம்மை நோயை ஒப்பான். அவனை ஊரைவிட்டு அகற்றுதல் நன்மையாம்.
 பெருகு-மிகவும். அபத்தம்-பொருந்தாதன. தூறல்-புறங் கூறல். குரு-அம்மைநோய்.
 7
 வேறு
 புறங்கூற்றாளர் பொல்லாப் பகைஞர்
269
வாட்படைவாங் குவரிலரேன் மாறுவரார் புறங்கூற்றைக்
கேட்பவர்தா மிலரென்னிற் கிளப்பவரார் பிறன்பழியை
வேட்பொடுசொல் வோரவதற்கு மேவலரென் றுனியதனைக்
கோட்புறலி லாதுசினங் கொண்டகற்றல் நெறியாமே.
  வாளாயுதத்தை வாங்குவாரில்லாவிட்டால் விற்பவரும் இல்லை. அதுபோல், புறங்கூறுதலைக் கேட்பவரில்லா விட்டால், சொல்வாரும் இல்லை. விரும்பிப் புறங் கூறுவோர் கூறப்படுவார்க்குப் பகைவரென நினைத்து அதனைக் கொள்ளுதலில்லாது அவரைச் சினந்து அகற்றுதல் முறையாம்.
  மாறுவார்-விற்பார். வேட்பொடு-விருப்பொடு.
  8
  ------