பக்கம் எண் :

145

 பொறாமை
 
 

பொறாமைத் துன்பம் போகா தொருநாளும்

310
மக்கள் பலருளார் மகிவி சாலமாம்
பக்க மவர்தினம் படைப்ப ரோர்நலம்
ஒக்க அதுபொறா துள்ள நைந்திடில்
துக்க மோயுமோ சொல்லென் நெஞ்சமே.
 

உலகம் பெரும் பரப்பினை உடையது. அப்பரப்புக்கு ஏற்றவாறு மக்களும் பலர் வாழ்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நலம் பெறுவர். அவற்றையெலாம் கண்டு மனம் பொறாது உள்ளம் இடிந்தால் அத்துன்பம் என்று முடியும்? நெஞ்சமே நீ சொல்.

 

மகி-உலகம். விசாலம்-பரப்பு. நைந்திடில்-இடிந்தால் ஓயும்-என்று முடியும்?

 

5

 

அவ்வியம் கொள்ளார் அறிவு மாண்புடையார்

311
நிறையு நீர்க்கசை வில்லை நீணிலத்து
அரையுங் கல்வியில் அறிவின் மேன்மையில்
குறையு ளார்க்கலாற் கோதின் மண்பினார்க்கு
இறையும் அவ்வியம் இல்லை யில்லையே.
 

கலம் நிறைய நீர் இருப்பின் அந்நீர் அசைந்து ஓசையிடாது. உலகத்துக் கல்வி யறிவினால் மேன்மையுற்றோர் பொறாமை கொள்ளார். அவற்றால் குறையுடையவரே பொறாமை கொள்வர்.

 அவ்வியம்-பொறாமை.
 

6

 

தீமைக்கு வருந்துவோர்ச் சேரும் பெருந்துன்பம்

312
அறமு ளார்கள்போல் அறிஞர் போல்புகழ்
பெறவ ருந்துதல் பெருமை யாயினும்
புறமு ளார்கள்போல் பொருளி லேமென
உறுமவ் வுறுகணே உறுக ணீயுமே.
 

நன்மையுள்ளவர்களையும் அறிவுள்ளவர்களையும் போல் இசையுண்டாகப் பாடுபடுதல் மேன்மை. ஆனால் பிறரைப்போலப் பொருளில்லையே என்று பொறாமைகொண்டு வருந்தும் வருத்தம் பெருந் துன்பம் தரும்.

 புகழ்-இசை. புறமுளார்-பிறர். பொருள்-பணம். உறுகண்-வருத்தம். உறுகண்-பெருந்துன்பம்.
 

7

 

நீ.-10