பக்கம் எண் :

146

 நீதிநூல்
 
 

வேறு

 

கொள்ளும் பொறாமையால் கூடும் புதுத்துன்பம்

313
பூட்டுமரி கண்டம் புனைந்தழுங்கு வார்போலுந்
தோட்டியினைத் தானே சுமந்துகொடுங் கயம்போலும்
வாட்டுந் துயர்கள்பல வைய மிசையிருக்கக்
கோட்டமுளோர் வேறா குலந்தமக்குண் டாக்குவரே..
 

கழுத்தில் இருப்பு வளையம் மாட்டித் துன்புறுத்துவாரைப் போலவும், தோட்டியைச் சுமந்து துன்புற்றழியும் யானை போலவும், உலகில் முன்வினைக்கீடாகப் பல வருத்தப்படும் மக்கள் பொறாமைத் துன்பத்தை வேறாகக்கொண்டும் வருந்துவர்.

 அரிகண்டம்-கழுத்தில் மாட்டும் இருப்பு வளையம். கோட்டம்-வளைவு; பொறாமை. ஆகுலம்-துன்பம்.
 

8

 

அதி. 27-கல்விச் செருக்கு

கல்வியால் செருக்குறக் காரணம் இல்லை

314
என்ன நீவருந் திக்கவி பாடினும்
    எடுத்தகற் பனைமுன்னோர்
சொன்ன தேயலால் நூதன மொன்றிலைத்
   தொன்மைநூல் பலவாகும்
முன்னந் நூலெலாந் தந்தவ னீயிலை
   முற்றுணர்ந் தனையல்லை
உன்னின் மிக்கவர் பலருளார் கல்வியால்
   உள்ளமே செருக்கென்னே.
 

நெஞ்சமே! நீ வருந்திக் கவி பாடினும் அக்கவியின்கண் காணப்படும் கற்பனை நயங்களெல்லாம் முன்னோர் பாடியனவே அன்றிப் புதிது ஒன்றுமின்று. முன்னுள்ள நூலும் பலவாகும். அவை எல்லாந் தந்ததும் நீயன்று. எல்லாங் கற்று முணர்ந்ததுமில்லை. உன்னைவிடக் கூடக் கற்றவரும் பலருளர். அதனால் கல்வியால் செருக்குதல் தக்கதன்று.

 நூதனம்-புதிது. தொன்மை-பழைமை. செருக்கு-இறுமாப்பு; தற்பெருமை.
 

1