| கல்விச் செருக்கு |
| எல்லாம் உணர்ந்தோம் என்று இறுமாத்தல் தீது |
315 | தருக்க நூலறி வோர்வியா கரணநூல் தகவறி யார்தேர்ந்தோர் இருக்கி லக்கிய முதலறி யார்பலர் இன்கவி செயக்கல்லார் சுருக்க மாகவோர் நூலினிற் சிறிதலால் துகளற எந்நூலும் பெருக்க மாவுணர்ந் தோரிலைத் தருக்குறல் பேதைமை நீர்நெஞ்சே. |
|
| அன்புள்ள நெஞ்சே! அளவை நூல் உணர்ந்தார் இலக்கண நூலின் தன்மை யறியார். இலக்கண நூலறிந்தார் அவ்விலக்கண அமைதியுள்ள இலக்கியத்தின் முதன்மை யறியார். பலர் இனிய செய்யுள் செய்யும் ஆற்றல் இலராவர். ஒரு நூலிலும் சிறிது கற்பதல்லால் முற்றும்கற்று வல்லவராகார். இப்படியிருக்கக் கல்வியால் தற்பெருமை கொள்ளல் அறியாமைத் தன்மையேயாம். |
| தருக்கம்-அளவை வியாகரணம்-இலக்கணம் |
| 2 |
| யார்க்கும் முழுதுணர இயலா; செருக்கலென்? |
|
316 | அத்திரங்கள் செய்வோர்தம் எய்தல் தேரார் ஆய்ந்தெய்ய அறிந்தோரம் பியற்றல் தேரார் சித்திரங்கள் பொறிப்பவர்தாங் கருவி செய்யார் திகழ்கருவி செய்பவர்சித் திரித்தல் கல்லார் வத்திரங்கள் பூண்போர்நெய் தறியார் இன்ன வாய்மைபோ லொன்றறிவோர் ஒன்று கல்லார் சத்தியமாச் சகலமுநன் குணர்ந்தோர் போலத் தருக்குற்றார் பெருக்குற்றார் திருக்குற் றாரே. |
|
| படைக்கருவி உண்டாக்குவோர் அப்படையினைப் பகைவன் மேல் குறிதப்பாமல் எறிய அறியார்; படை எறிய அறிவோர் படைக் கருவியை உண்டாக்க அறியார்; ஓவியம் எழுதுவோர் அதற்கு வேண்டும் கருவிசெய்ய அறியார்; கருவி செய்வோர் ஓவியம் எழுத அறியார். ஆடை யணிபவர் நெய்ய அறியார். |