பக்கம் எண் :

151

 அழகாற் செருக்கல்
 
 

கெண்டைமீனை யொத்த கண்களும், தீம்பாலையொத்த மொழியும் காணப்பெறாமையால் மயங்கினோம்.

 

தோல்-அழகு. சுடலை-சுடுகாடு. திகைப்பு-மயக்கம்.

 

2

 

நாறுட லழகால் செருக்குறார் நல்லோர்

322
நோக்கதனிற் பீளையிரு செவிகளிலுங்
    குறும்பியன நுகர்வா யெச்சில்
மூக்கதனிற் சளிதலையிற் பேன்வெயர்வை
   மலசலங்கள் மூளு நாற்றம்
போக்கவொரு நாட்கழுவா விடிலழுக்கு
   மிகத்திரண்டு புழுத்து நாறும்
ஆக்கமிலாத் தேகமிதை யழகென்னச்
   செருக்கலறி யாமை யாமே.
 

கண்ணில் பீளை வடிதலும், காதில் குறும்பி சேர்தலும், வாயில் எச்சில் ஊறலும், மூக்கில் சளியுண்டாதலும், தலையின்கண் பேனும், உடம்பில் வெயர்வையும், ஒன்றுக்கிரண்டுக்குச் செல்லலும் அதனால் வரும் தீயநாற்றமும் ஆகிய இவற்றைப் போக்க ஒவ்வொரு நாளும் முழுகவேண்டும்; முழுகாவிட்டால் புழுத்து நாறும். இத்தகைய உடம்பில் காணும் அழகினுக்குச் செருக்குக்கொள்வது அறிவின்மையேயாகும்.

 நோக்கு-கண். செருக்கு-தற்பெருமை.
 

3

 

வேறு

உடலுள் அழுக்கை உன்னில் செருக்குறார்

323
கட்புலன்றனை யேகவர்ந்திடு கவினுளேமென வனுதினம்
பெட்புறப்புவி யிற்செருக்குதல் பெருமையன் றொளிர்பேருடல்
உட்புறத்தி னையேதிருப்பிடி லோங்கலாமலக் காடுசூழ்
மட்புறச்சுவர் தீட்டுசித்திர மானுநம்மெழில் நெஞ்சமே.
 

நெஞ்சே! கண்ணைக் கவரும் அழகுடையேம் என்று நாளும் உலகில் விருப்புடன் தற்பெருமை கொள்ளுதல் மாண்பாகாது. விளங்குகின்ற பெரிய உடம்பின் உட்பக்கத்தைத் திருப்பினால் மலைபோன்ற அழுக்குப் பெருக்கத்தைக் காணலாம். மண்சுவர் மேல் எழுதிய சித்திர அழகையொக்கும் நம் உடல் அழகு.