பக்கம் எண் :

157

 தீயரைச் சேராமை
 
 

இடத்தில் வீழ்ந்துவிட்டால் அதனை யாரும் கொள்ளாது தள்ளுவர். இவைபோல் கீழோரைச் சேர்ந்த நல்ல குணமுடையோரும் இழிவு பெறுவர்.

 

கோள்-மதிப்பு. மருவுநர்-கூடுவோர். இகழ்ச்சி-இழிவு.

 

3

 

வேறு

 

இழிந்தாரைச் சேரின் இழிவென்றும் நீங்கா

335
மணமனை சேர்மண மாலை மாண்புறும்
பிணவனத் தாரிழி வெய்தும் பெற்றியார்
கணமதிற் சேர்ந்தவர் கனங்கொண் டோங்குவர்
குணமிலா ரினமுறல் குறையுண் டாக்குமே.
 

கலியாண வீட்டைச் சேர்ந்த மணமுள்ள பூமாலை சிறப்படையும். அம்மாலை சுடுகாட்டைச் சேர்ந்தால் மிக்க இழிவடையும். நல்ல தன்மையையுடைய பெரியவர் கூட்டத்தில் சேர்ந்தவர் பெருமைபெற்று உயர்வர். நல்ல பண்பில்லாதவர் கூட்டத்தைச் சேர்ந்தால், இழிவையுண்டாக்கும்.

 பிணவனம்-சுடுகாடு. பெற்றியார்-பெரியவர். கணம்-கூட்டம். கனம்-பெருமை. குணமிலார்-இழிந்தவர். இனம்-கூட்டம். குறை-இழிவு.
 

4

 

தாழ்ந்தோர் உயர்ந்தோர் எனும்பேர் சார்பாலுண்டாம்

336
மண்ணியல் பாற்குண மாறுந் தண்புனல்
கண்ணிய பொருள்மணங் கலந்து வீசுங்கால்
புண்ணிய ராதலும் புல்ல ராதலும்
நண்ணினத் தியல்பென நவில லுண்மையே.
 

குளிர்ச்சி பொருந்திய தண்ணீர் தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினால் தன்மையில் மாறுதல் அடையும். காற்று தான் பொருந்திய பொருளின் மணத்தைக் கலந்து வீசும். அவைபோல் மக்கள் உயர்ந்தோர் ஆதலும் தாழ்ந்தோர் ஆதலும் அவரவர் சார்ந்த கூட்டத்தின் தன்மையெனக் கூறுவது உண்மையாகும்.

 கண்ணிய-பொருந்திய. கால்-காற்று. புண்ணியர்-உயர்ந்தோர். புல்லர்-தாழ்ந்தோர். நண்ணல்-சார்தல். நவிலல்-கூறுதல்.
 

5