| நீதிநூல் |
| எல்லாக் கேட்டையும் தருவ திழிசொல் |
348 | இக்குவல யக்கணிழி வுக்கிடம தாகும் பக்கரொடு மக்கள்பகை புக்கவழி பண்ணும் துக்கமும் விளைக்குமொரு துக்கமும் விளைக்குங் குக்கனை நிகர்க்குமவர் கக்குமிழி கூற்றே. |
|
| நாயை ஒப்பவர் சொல்லும் அருவருக்கத்தகுந்த இழிசொல் இவ்வுலகத்தில் இழிவுக்கிடந்தரும். இனத்தாரையும் மக்களையும் பகைவர்களாக்கும். சாவைத் தரும்படியான ஒரு நோயைத் தரும். |
| குவலயம்-உலகம். பக்கர்-இனத்தார். துக்கம்-சாவு. துக்கம்-நோய். குக்கன்-நாய். |
| 2 |
| நலம்பொலம் அவரவர் வாய்மொழி நவிலும் |
|
349 | சந்தநிறை செப்பிறைவை சாணமுள தென்னக் கந்தம தெவர்க்குநனி காட்டிவிடல் போலும் நிந்தனையு ளாரினிய நீர்மையின ரென்ன முந்தவவர் வாய்மொழி மொழிந்துவிடு மன்றோ. |
|
| சந்தனம் நிறைந்த செப்பும் சாணம் உள்ள கூடையும் அவ்வவற்றின் மணம் காட்டிவிடுதல் போல, பொல்லாரையும் நல்லாரையும் அவரவர் வாய்மொழியே காட்டிவிடும். |
| சந்தம்-சந்தனம். இறைவை-கூடை. நிந்தனை-பொல்லாங்கு. |
| 3 |
| இல்லாப் பெயரையும் இயற்றும் வாய்ச்சொல் |
350 | நன்மைபுரி யார்களு நயந்தவிர் கொடுஞ்சொல் இன்மையெனி னல்லவ ரெனப்புகழ் படைப்பார் தின்மைபுரி யார்களும் வழங்குமுரை தீதேல் புன்மையுறு தீயரென எள்ளுமுயர் பூவே. |
|
| நன்மை புரியாதவர்களும் கொடுஞ்சொல் கூறாரானால் நல்லவரெனப் புகழ் பெறுவர். தீமை செய்யாதவர்களும் கொடுஞ்சொல் கூறுவாராயின் இழிவான தீயவரென உலகத்தார் இகழுவர். |
| பூ-உலகம். |
| 4 |