பக்கம் எண் :

166

 நீதிநூல்
 
 

என உசாவி அன்புடன் முகமலர்ந்து வாழ்த்தி வரவேற்புச் செய்யும் செயலால் ஒரு செலவும் இல்லை. ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட உலகவருடைய அன்பு முழுவதும் வரவாகும்.

 முகமன்-இன்சொல். இருக்கை-மணை; ஆசனம். அதிசயம்-நன்மை; சிறப்பு. துதி-வாழ்த்து. உபசரிக்கும்-வரவேற்கும்.
 

7

 

துன்பொழித் தின்பம் சுரக்கும் இன்சொல்

354
உருமைமின் னினைத்தன் பாற்கொண்டுதகமன் உயிர்க்கு நல்கும்
கருமுகி லெனக்கண் ணாலென் காணினும் கேட்பி னுஞ்சூழ்
பருவர லேதி லார்க்குப் பயக்கும்வன் சொல்லை நீத்து
மருவிய நலங்க லந்த வசனமே பகர்வர் நல்லோர்.
 

இடியையும் மின்னலையும் தன்னிடம் வைத்துக்கொண்டு நிலைபெற்ற உயிர்களுக்குத் தண்ணீரையே தரும் மேகம்போன்று, அயலவர் பார்வையிலும் கேள்வியிலும் துன்புறும்படியான வன்சொல்லை விலக்கி நன்மை மிக்க இன்சொல்லையே நல்லோர் கூறுவர்.

 உருமை-இடியை. உதகம்-நீர். பருவரல்-துன்பம்.
 

8

 

உற்றிடத்து நல்லன உரைப்ப தின்சொல்

355
நதிமுதல் புகுவ தெல்லாம் நன்ககட் டிடை யடக்கும்
அதிர்கட லெனவும் ஈயார் அருத்தமஞ் சிகையே போலும்
வதிசெவி நுழைவ தெல்லா மனத்தினு ளடக்கித் தக்க
ததியறிந் துரைப்ப தன்றிச் சகலர்க்கு முரையார் மிக்கோர்..
 

அறிவான் மிக்கவர் யாறு முதலிய வந்தவற்றையெல்லாம் தன்பால் வைத்திருக்கும் கடலை யொத்தும், ஈயாதவர் செல்வம் அடங்கியிருக்கும் பணப்பெட்டியை யொத்தும் செவிவழி நுழைந்தவற்றையெல்லாம் மனத்தினுள் அடக்கி நல்லவற்றையே உற்றவிடத்து நல்லவர்க்கு உரைப்பர். எல்லோர்க்கும் உரையார்.

 நதி-யாறு. அகடு-நடுவிடம். மஞ்சிகை-பெட்டி. வதி-வழி. ததி-உற்ற இடம்.
 

9

 

------