| |
| அதி. 34-நெடுந்துயில் |
| சிற்றுயிர் உணர்த்தியும் துயிலெழார் சிறப்பென் |
361 | விடியலிற் பறவை மிருகம் யாவுமுன் விரைந்தெ ழுந்து பலவி னைசெயுங் கடிமலர்ப் பொழில்கண் மலருமார் வமொடு கடலெ ழுந்து கரைதா விடும் படியின் மன்னுயி ரெலாமெ ழுந்து தொழில் பல வியற்றிட வெழா மலே தடியெ னத்துயி லுவோனரன் கொலொரு தாவ ரங்கொ லறியே மரோ. |
|
| வைகறைப்பொழுதில் புள் விலங்கு முதலிய யாவும் முன்னரே விரைந்தெழுந்து தத்தம் தொழில்களைச் செய்கின்றன. மணமிக்க மலர்களுடைய சோலைகள் மலர்கின்றன. கடல், மிக்க ஆர்வமுடன் கரையை மோதுகின்றது. இன்னும் உலகில் பல வுயிர்களும் தத்தம் தொழிலைச் செய்கின்றன. ஒருவன் உயிரில்லாத மரக்கட்டைபோன்று தூங்குகின்றான். அவன் மகனோ? மரமோ அறியமுடியவில்லை. |
| விடியல்-வைகறை. பறவை-புள். மிருகம்-விலங்கு. கடி-மணம். தாவிடும்-மோதும். படி-உலகம். தடி-மரக்கட்டை. தாவரம்-வேருள்ளது; மரம். |
| 1 |
| வேறு | பகலும் தூங்குவர் படிப்பிலா மூடர் |
|
362 | தங்கரு மங்கள் செய்யத் தனிப்பகல் போதா தென்ன இங்கறி வுடையோர் தூங்கா ரிரவினு மூடர் துஞ்சக் கங்குலும் போதா தென்னப் பகலுங்கண் படுவர் யாவும் புங்கமாத் தேர்ந்து வேறோர் புரையிலார் போலு மாதோ. |
|
| அறிவுடையோர் தம் கடமையைச் செய்யப் பகல்பொழுதும் போதாதென்று இரவினுந் தூங்காது செய்வர். அறிவில்லாத மூடர் தூங்குவதற்கு இராப்பொழுதும் போதாதென்று பகலிலுந் தூங்குவர். இவர், எல்லாம் சிறப்பாக ஆய்ந்து எவ்வகையான குற்றமும் இல்லாதவர் என்று தம்மைக் கருதுகின்றார் போலும். |
| கருமம்-கடமை. கண்படுவர்-தூங்குவர். புங்கம்-சிறப்பு. தேர்ந்து-ஆய்ந்து. புரை-குற்றம். |
| 2 |