பக்கம் எண் :

171

  
 

அதி. 35-பேருண்டி

 

பேருண்டி நோய்பிணி பெருக்குந் தூதன்

365
நனிநிழல் புனல்கொள் பைங்கூழ் நாசமா மிகவே யுண்ணும்
இனியமா மருந்து நஞ்சா மின்பமு மிகிற்றுன் பாகும்
பனிபிணி மடமை மந்தம் பழியெலாம் வம்மி னென்னக்
கனிவொடு மழைக்குந் தூதாங் கழியபே ருண்டி மாதோ.
 

நிழலும் அளவுக்கு மிஞ்சிய நீருங்கொண்ட நெற்பயிர் அழியும். அளவுக்கு மிஞ்சியுண்ணும் அமிழ்தமும் நஞ்சாகும். சிற்றின்பமும் வரம்பு மீறினால் துன்பமாம். (இவைபோல்) அளவுக்கு மிஞ்சி உண்ணும் ஊண் சுரம், நோய், அறியாமை, சுறுசுறுப்பின்மை, பழி முதலிய தீமைகளையெல்லாம் விருப்புடன் அழைக்கும் தூதாகும்.

 நனி-மிகுதி. பைங்கூழ்-நெற்பயிர். மருந்து-அமிழ்து. பனி-சுரம்; காய்ச்சல். மந்தம்-சுறுசுறுப்பின்மை. கழிய-மிக; அளவுக்கு மிஞ்சிய.
 

1

 

அளவிலா உண்டியால் ஆற்ற லழியும்

366
கொள்ளுரு நீரைக் கொண்ட குளங்கரை புரண்டு முன்னம்
உள்ளநீ ரையுமி ழக்கும் உண்மைபோற் பேர கட்டின்
பள்ளமே டாக வுண்ணும் பதமுடல் வளத்தைப் போக்கும்
எள்ளலில் சிற்று ணாவற் றுடலெங்கு மியங்கு மாலோ.
 

அளவுக்கு மிஞ்சிய நீரைக்கொண்ட குளம் நிரம்பி வழிந்து முன் உள்ள நீரையும் இழக்கும். இந்த முறைமைபோல் பெருவயிற்றின் பள்ளம் மேடாக விலாப்புடைக்க உண்ணும் ஊண் உடல் வளமாகிய வலிமையைப் போக்கிவிடும். மதிக்கத் தகுந்த அளவு உணவாகிய சிற்றுணவு தூய குருதியாக மாறி வற்றிய உடல் எங்கும் பரவி வலிமையைத் தரும்.

 கரை புரண்டு-நிரம்பி வழிந்து. அகடு-வயிறு. பதம்-உணவு. வளம்-வலிமை.
 

2

 

பயன் மிகுந்தது பட்டினி யிருத்தல்

367
பாரண மின்றிச் சின்னாள் பசித்திருந் தாலு நன்றாஞ்
சீரண மின்றி யுண்ணும் தீனிநோய் செயும தற்கோர்
சூரண மிலைமெய்த் தன்மை துவ்வுணாத் தன்மை யேனைக்
காரண காரி யங்கள் கண்டுண்பா ரறிஞ ரம்மா.