பக்கம் எண் :

174

 

அதி. 36-தற்புகழ்

 

பிறரால் புகழப் பெறுவதே பெருமை

371
தன்றுதி பிறர்சொலத் தகுமன் னோர்புகழ்
இன்றியே தன்னைத்தான் ஏத்தல் ஊர்தியில்
ஒன்றுமா பூட்டிடா தொருவன் உள்ளுறூஉம்
மன்றவே நடத்துவான் வலித்தன் மானுமே.
 

தன் புகழைப் பிறர் வாயாரச் சொல்லுவதே தக்கது. அப்படிக்கின்றித் தன்னைத் தான் புகழ்தல், வண்டியுள் இருப்பவன் அவ்வண்டியை இழுப்பதற்கு மாடு, குதிரை இவற்றுள் ஒன்றும் பூட்டாமல் இருந்தபடியே அவ்வண்டியை உந்தித் தள்ளுவதையே ஒக்கும்.

  துதி-புகழ். ஊர்தி-வண்டி. மா-மாடு; குதிரை. வலித்தல்-தள்ளுதல். மானும்-ஒக்கும்.
 

1

 

நேரில் புகழ்வது நினைக்கில் வைவாம்

372
ஒருவன்கா ணாவிடத்து உவனை மெச்சலே
தருமமாம் முகத்துதி சாற்றல் வைதலாம்
பெருமுறை யீதெனில் பிறர்முன் தன்னைத்தான்
பொருளென மெச்சல்போற் புன்மை வேறுண்டோ.
 

ஒருவனைக் காணாவிடத்து அவன் புகழை எடுத்துப் பேசுதல் அறமுறையாம். அவன் நேரில் புகழ்வது திட்டுவதே யாகும். இவற்றுக்கு மாறாகத் தன்னைத்தானே மதித்துப் புகழ்வது இழிவாம்.

 முகத்துதி-புகழ். வைதல்-திட்டல். புன்மை-இழிவு,
 

2

 

பல்லக்கைத் தான் சுமக்கும் பண்பே தற்புகழ்தல்

373
தன்துதி பிறர்சொலத் தகுந்தன் வாயினால்
ஒன்றுறத் தன்துதி யோதல் ஊர்ந்துதான்
சென்றிடும் ஊர்தியைச் சிவிகை யாரின்றித்
துன்றுதன் தோளினால் சுமத்தல் போலுமே.
 

தன் புகழைப் பிறர் கூறுவது தக்கது. தானே புகழ்வது, பல்லக்கின்மேற் செல்வோன் அப் பல்லக்கைச் சுமக்கும் ஆட்கள் இல்லாமல் தன் தோளினால் தானே சுமந்து செல்வதை ஒக்கும்.

 ஊர்தி-ஈண்டுப் பல்லக்கு. சிவிகையார்-பல்லக்குச் சுமப்போர்.
 

3