| புகழும் இகழும் மதியாமை |
| தொழும் அருள் இலார்புகழ் துன்பமேற் பூச்சே |
382 | பகவன தருளும் நெஞ்சும் பழிச்சலும் நிலையாம் தன்னை அகமுனிந் தனல்போல் தீக்க அறமென்ப தொருபால் சீறச் சகமெலாம் புகழ்தல் மெய்மேற் சைத்திய உபசா ரங்கள் அகமிலாக் கொடிய தாபச் சுரத்தினார்க் கியற்றல் போலும். |
|
| ஆண்டவனை மனமாரத் தொழுதலும் அவன் அருள் பெறுதலும் நிலையாக எய்தவேண்டிய ஒருவனை, செருக்கு தழல்போல் வாட்டுகின்றது. அறம் நன்மை செய்க எனச் சீறுகின்றது. இந்நிலையில் உலகோர் புகழும் புகழ்ச்சி, நலமுறாத கொடிய காமச் சுரநோய் உற்றவர்க்கு அவர் உடம்பின்மேல் சுரம் நீங்கும் பொருட்டுக் குளிர்ந்த பொருள்களைப் பூசுதல் போலும். |
| பகவன்-ஆண்டவன். பழிச்சல்-புகழ்தல். அகம்-செருக்கு. அனல்-தழல். சகம்-உலகம். சைத்தியம்-குளிர். தாபம்-விரகதாபம்; காமம். |
| 4 |
| குணங்கொள்ளிற் குறைவிலாப் புகழ்கை கூடும் |
|
383 | மங்கலில் சீர்த்தி வேட்டாய் மடஞ்சினம் உலோப மோகம் அங்கதம் முதல்யா விற்கும் விடைகொடுத் தறிவன் பீகை பங்கமில் குணங்கள் யாவும் வாழுமோர் பதிநீ யாயின் சிங்கலில் புகழ்கொள் வாயுன் சிரத்தின்மேல் ஆணை நெஞ்சே.. |
|
| நெஞ்சே! நீ கேடிலாத புகழை விரும்புகின்றாய். அதற்கு அறியாமை வெகுளி இவறல் காமம் பொய் முதலிய குற்றங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, அறிவு அன்பு, ஈகை முதலிய குற்றமற்ற நற்பண்புகள் யாவும் உறைவதற்கு இடமாக இருப்பாயானால், குறையாத புகழ் எய்துவாய். உன் தலைமேல் ஆணையிட்டுச் சொல்லுகின்றேன். |
| மங்கல்-கேடு. அங்கதம்-பொய். சிங்கல்-குறைவு. |
| 5 |