பக்கம் எண் :

180

  நீதிநூல்
 
 

உள்ளும் புறமும் ஒவ்வாச்சொல் உண்மையன்று

384
அத்திசூ ழுலகிற் சில்லோர்
    அகத்தொன்றும் வாக்கி லொன்றும்
வைத்திதஞ் சொல்லா லியாவும்
    வனச்செவி யேற்ப தன்றிச்
சத்திய மெனக்கொண் டேகல்
    சக்கினை மூடி நீண்ட
பித்திகை யேறிச் செல்லும்
    பேதைமை நிகர்க்கு மாதோ.
 

கடல் சூழ்ந்த உலகத்தில் சிலர் உள்ளொன்றும் புறம் ஒன்றும் வைத்து இன்உரையாடலால், அவ்வுரைகளை அழகிய செவியிற் கொண்டு விடுவதன்றி உண்மையெனக் கொண்டால், அது கண்ணை மூடிக்கொண்டு, பெரிய மதில்சுவர்மேல் ஏறும் அறியாமையை ஒக்கும்.

  அத்தி-கடல். இதம்-இனிமை. வனம்-அழகு. சக்கு-கண். பித்திகை-சுவர். பேதைமை-அறியாமை.
 

6

 

வேறு

 

பகைவர்சொல் ஆய்வால் பயன்பெரி துண்டாம்

385
தன்னைத் தன்குணத் தன்மையைத் தேரவே
உன்னு கின்றவன் ஓங்கிய நட்பினோர்
நன்ன யச்சொல்நம் பாமல்நள் ளார்தினம்
பன்னு மாற்றங்கள் நம்பிற் பயனரோ.
 

தன்னையும் தன்னுடைய பண்புகளையும் பிழைப்பு வாய்ப்பு ஆராய நினைக்கின்றவன் தனக்கு வேண்டிய நண்பர்கள் சொல்லும் இன்சொற்களை முற்றும் அப்படியே நம்பாமல், தன் பகைவர்கள் சொல்லும் வன்சொல்லை நம்பி அச்சொல்லுக்குரிய குற்றங்களைத் தன்பால் நின்றும் அகற்றிவிடின் ஆராய்வின் பயனுண்டாம்.

 குணம்-பண்பு. நள்ளார்-பகைவர். மாற்றம்-சொல்.
 

7

 

------