பக்கம் எண் :

184

 நீதிநூல்
 
 

அருட்கும் தகுதியுடையவரல்லர். சிறந்த வலக்கை செய்யும் அறத்தை விளங்கும் இடக்கை அறியாதபடி தகுதியுடைய ஏழைகட்கு நிலைமையுணர்ந்து கைம்மாறு கருதாது கொடுப்பவரே உயர்ந்தோராவர்.

 

அறம்-நன்மை. நித்தன்-அழிவில்லாதவன். கரம்-கை. பாத்திரம்-தகுதி; உரிமை. வழங்குதல்-கைம்மாறு கருதாது கொடுத்தல். மாட்சியோர்-உயர்ந்தோர்.

 

6

 

உற்றிடத் துதவி உலகினும் பெரிது

392
மக்கடம் பொறையைத் தாங்கு மகிக்குமன் னாரைக் காக்க
மிக்கநீர் பொழியா நின்ற விண்முகி லினுக்குஞ் செய்யத்
தக்கவோரெதிர்நன்றுண்டோசமயத்தோர்பயனும்வேண்டாது
ஒக்கவே செய்த நன்றி யுலகினும் பெரிதா மாதோ.
 

மக்கள் முதலிய உயிர்களை எல்லாம் சுமக்கும் நிலத்திற்கும், நீரை வழங்கி நிலைப்பிப்பதாகிய காத்தலைச் செய்யும் மழைக்கும் செய்வதற்கியன்ற கைம்மாறு நம்மிடத்து என்ன இருக்கின்றது? ஏதும் இல்லை. உற்றகாலத்து எவ்வகைப் பயனையும் நாடாது மனமொத்துச் செய்த நன்மை `ஞாலத்தினும் மாணப் பெரிதாம்.ழு

 பொறை-சுமை. மகி-நிலம். முகில்-மழை. சமயம்-உற்ற காலம். உலகு-ஞாலம்.
 

7

 

உயிரும் ஈந்து பிறர்க்கு உதவுவர் நல்லோர்

393
மன்னிய கனிகாய் நீழல் மற்றெலா முதவிப் பின்னுந்
தன்னையு முதவா நின்ற தருவெனத் தங்கை யார்ந்த
பொன்னெலாமுதவிப்பின்னும்பூட்சியாலுழைத்திட்டேனும்
இன்னுயி ருதவி யேனும் இடுக்கண்தீர்ப் பார்நல் லோரே.
 

நிலைத்த பழம் காய் நிழல் முதலிய பலவும் உதவிய மரம் தானும் கோவில் வீடு கப்பல் முதலிய பலவற்றுக்கும் பயன்படும்படி தன்னையும் உதவுகின்றது. அதுபோன்று நல்லோர்கள் தம் கைப்பொருளெல்லாம் உதவிய பின்னும உடல் வருந்தி உழைத்திட்டும் இன்னுயிர் கொடுத்தும் பிறர் துன்பங்களைப் போக்குவர்.

  தரு-மரம். பூட்சி-உடல். இடுக்கண்-துன்பம்.
 

8