பக்கம் எண் :

185

 கைம்மாறு கருதா உதவி
 
 

பகைவர்க்குச் செய்யும் உதவிக்குப் பேரின்பம் பயன்

394
நள்ளுநர் தமக்கும் என்றும் நன்றெமக் கியற்று வோர்க்கும்
உள்ளுவந் தியற்று கின்ற உதவிதான் அரிய தன்று
புள்ளுவம் இழைக்கா நின்ற பொருந்தலர்க் காற்று நன்றி
விள்ளும்வீட் டின்பந் தன்னை விளைக்கின்ற வித்தாம் நெஞ்சே.
 

நெஞ்சே! செறியும் நண்பர்க்கும் நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்வோர்க்கும் மனமகிழ்ந்து செய்யும் உதவி சிறந்தது அன்று. நமக்கு வஞ்சகம் செய்யும் பகைவர்க்குச் செய்யும் நன்மை புகழ்ந்து சொல்லப்படும் வீட்டின்பத்தினைத் தருதற்குச் சிறந்த காரணமாகும்.

 நள்ளுநர்-நண்பர். அரியது-சிறந்தது. புள்ளுவம்-வஞ்சகம். இழைத்தல்-செய்தல். விள்ளும்-சொல்லும். வித்து-காரணம்.
 

9

 

வேறு

 

அளவிலார் உதவியால் ஆவி வாழும்

395
ஊட்டி நீர்கறி யுடைபணி விறகில்
    உரிய யாவையும் நாம்பெறு வான்பல்
நாட்டில் காட்டில்பொற் சுரங்கத்தில் கடலின்
    அகத்தில்எண் ணிறந்தவர் நமக்கு ழைப்பார்
சூட்டி வைகலும் ஆயிரம் பேர்தம்
    துணையி லாதுயி ருயல்நமக் கரிதாம்
ஆட்டி யித்தனை பேர்பணி கொளுநாம்
    அன்பி லாதிருப் பதுதகா துளமே.
 

நெஞ்சே! உணவு தண்ணீர் காய்கறி ஆடை அணிகலன் விறகு முதலிய வீட்டுக்கு இன்றியமையாது வேண்டிய எல்லாப் பொருள்களையும் நாம் அடைவதற்கு நாட்டிலும் காட்டிலும் கீழறையாகிய சுரங்கங்களிலும் கடல் நடுவிலும் அளவில்லாதவர்கள் நமக்காக உழைக்கின்றார்கள். நம் தூண்டுதலால் நாள்தோறும் செய்யும் ஆயிரக்கணக்கானவர் துணையின்றி நாம் உயிர்வாழ முடியாது. இவ்வளவு மக்களையும் அலைத்து வேலை கொள்ளும் நாம் எல்லாரிடத்திலும் அன்பில்லாமலிருப்பது முறைமையாகாது.

  ஊட்டி-உணவு. இல்-வீடு. பெறுவான்-அடைவதற்கு. சூட்டி-தூண்டி. ஆட்டி-அலைத்து. தகாது-முறைமையாகாது.
 

10