பக்கம் எண் :

188

  நீதிநூல்
 
 

தந்தை தாய் அனைய ஆண்டவன் மக்களனைய பல்லுயிர்க்கும் அளவில்லாத உலகியற் பொருள்களை அருளால் படைத்தளித்தான். இவ்வுண்மை யறியாத சிலபேர்கள் அவற்றையெல்லாம்முறைகெடக் கவர்ந்து மறைத்துத் தீமைகள் செய்தலினால், பலபேர் வறியராய்ப் பசி நோய் மிகுந்து உள்ளம் துன்புற்று வருந்துவர். உறுதி நூல்களைக் கற்றுத் தெளிந்த நல்லவர் ஏழைகளைக் கைதூக்கிக் காப்பவர் ஆவர்.

 வவ்வுதல்-கவர்தல். ஒளிக்குபு-மறைத்து. சொல்-உறுதிநூல். அளித்தல்-காத்தல்.
 

14

 உளமுவந் தீபவை உயிர்க்குறுதி யாகும்
400
துய்க்கும் பொருள்களுமே நமதல துய்த்தலில் லாதுசும்மா
வைக்கும் பொருள்களுமே நமதல* மாண்டபின் கூடவரா
எய்க்கும் வறுமையினார்க் கனுதினம் ஈயும் பொருள்நமது
கைக்குள் உறுபொருளாம் இதனைக் கண்டுண ராய்மனமே.
 

நெஞ்சே! நாம் உண்ணும் பொருளும், உண்ணாது சேர்த்து வைத்திருக்கும் பொருள்களும் நம் உயிர்க்குப் பயன் தரக்கூடிய பொருளன்று. அவை இறந்தபின் நம்முடன் வருவதில்லை. கொடிய வறுமையினால் இளைத்து வாடும் எளியவர்கட்கு மனமுவந்து குறிப்பறிந்து ஈயும் பொருளே நமக்குரிய பொருளாம். இதனை உணர்வாயாக.

 

15

 

வேறு

 

பெருந்துன்புற்றும் பெரியோர் பிறர்நோய் ஒழிப்பார்

401
நூனு ழைந்த நுவலருஞ் சீலர்தம்
பானு ழைந்த படர்மதி யார்பிறர்
கானு ழைந்த கடுவுந்தங் கண்ணின்வை
வேனு ழைந்தென முன்னி மிறைப்பரே.
 

நுண்ணிய நூலறிவு கைவரப்பெற்ற நல்லொழுக்கமுடைய சான்றோர், தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பொருட்படுத்தார். (ஆனால்) பிறருடைய காலில் தைத்த முள்ளின் துன்பம் தம்முடைய கண்ணில் பகைவர்களால் பாய்ச்சிய கூரிய வேலின் துன்பத்தினும் கடுமையெனக் கருதி வருந்தி அத்துன்பத்தை நீக்குவர்.

 படர்-துன்பம். மதியார்-பொருட்படுத்தார். கடு-முள். முன்னி-கருதி. மிறைப்பர்-வருந்துவர்.
 

16

 


*ஈத்துவக்கும், திருக்குறள்: 228