பக்கம் எண் :

189

  கைம்மாறு கருதா உதவி
 

பிறர்துயர் போக்கிப் பேணுக புகழுடல்

402
புறம்வ ருந்திடப் பூத வுடம்பினை
மறவு டம்பை வளர்ப்ப ரறிவிலார்
உறவி டும்பை உறாவண்ண மீந்துநல்
அறவு டம்பை வளர்ப்ப ரறிஞரே.
 

பக்கத்திலுள்ளவர்கள் பசி நோய் முதலியவற்றால் வருந்தக் கண்டும் அறிவில்லாதவர் ஐம்பூதத்தாலாகிய பருவுடம்பை-பாவவுடம்பை-வளர்ப்பார்கள். அறிவுடையவர்கள் எவரும் எவ்வகைத் துன்பமும் அடையாதபடி மிகுதியாகக் கொடுத்துத் தம் அறவுடம்பை-புகழுடம்பை வளர்ப்பார்கள்.

புறம்-பக்கம். பூதம்-பருமை. மறம்-பாவம். உற-மிகுதியாக. அறம்-புண்ணியம்; புகழ்.
 

17

 

தேடிநல் உதவி செய்வோர் பெரியோர்

403
ஓடி யெங்கு முலரும்பைங் கூழ்களை
நாடி மைமுகி னன்மழை பெய்தல்போல்
வாடி நையும் வறிஞ ரிருக்கையைத்
தேடி மேலவர் செய்வ ருதவியே.
 

மழையின்றி வாடும் நெற்பயிர்களை ஆராய்ந்து விரைந்து சென்று எவ்விடத்தும் கரிய மேகம் மழையைப் பொழிதல்போல, அறிவுடையோர் வாடி வருந்தும் ஏழைகள் தங்கும் இடத்தைத் தேடிச்சென்று வேண்டும் உதவிகளைச் செய்வர்.

பைங்கூழ்-நெற்பயிர். மை-கருமை. முகில்-மேகம். நையும்-வருந்தும். மேலவர்-அறிவுடையோர்.
 

18

 

இரந்தும் ஏழைகளுக்கு ஈவர் நல்லோர்

404
காரி டத்திரந் தேனுங் கயநதி
நீரி னைப்பணை யெங்கு நிறைத்தல்போல்
யாரி டத்திரந் தேனு மறமுளார்
பாரி டத்துப் பகுப்பர் வறிஞர்க்கே.