பக்கம் எண் :

191

     பொருளாசை யொழித்தல்
 
 

    பிறர்க்குதவி செய்வோர் பேரின்பம் பெறுவர்

407
காமமே வின்பங்கள் கணத்தி னீங்கிப்பின்
தீமையே விளைத்திடும் பிறர்க்குச் செய்கின்ற
சேமநல் லுதவியாற் சேரு மின்பந்தான்
நீமவீட் டின்பென நிகரு மற்றதே.
  தகாத ஆசையால் உண்டாகும் இன்பங்கள் இமைப்பொழுதில் கழிந்து பின் துன்பத்தையே பெருகச்செய்யும். பிறருக்கு வேண்டிய நல்லுதவி செய்யும் நன்மையால் இடையறாத இன்பம் உண்டாகும். அந்த இன்பம் பேரின்ப வீட்டின்பத்தை ஒத்திருக்கும்.
  காமம்-தகாத ஆசை. மேவு-பொருந்தும். கணம்-இமைப்பொழுது. சேமம்-நன்மை. நீமம்-ஒளி; பேரின்பம். நிகரும்-ஒக்கும்.
 

22

  அதி. 39--பொருளாசை யொழித்தல்
  தன்பெயர் எழுதாப்பொருள் தனதெனல் எங்ஙனம்?
408
என்பொருளென் பொருளென்று சீவன்விடு
    மனமேயொன் றியம்பக் கேளாய்
உன்பொருளா னாலதன்மே லுன்னாமம்
    வரைந்துளதோ வுன்ற னோடு
முன்பிறந்து வளர்ந்ததுகொல் இனியுனைவிட்
    டகலாதோ முதிர்ந்து நீதான்
பின்பிறக்கும் போததுவுங் கூடவிறந்
    திடுங்கொல்லோ பேசு வாயே.
  நெஞ்சே! என்னுடைய பொருள், என்னுடைய பொருள் என்று உயிர்விடுகின்றனை. உனக்கு ஒன்று சொல்லுகின்றேன் கேள். உன்னுடைய பொருளானால் அப்பொருளின் மேல் உன் பெயர் எழுதப்பட்டிருக்கின்றதா? நீ பிறக்கும்போது உன்னுடன் பிறந்து வளர்ந்ததா? இனிமேலும் அஃது உன்னைவிட்டு நீங்காதா? நீ மூப்படைந்து சாவும்பொழுது அதுவுங் கூடச் செத்திடுமா? ஆராய்ந்து சொல்வாயாக.
  சீவன்-உயிர். நாமம்-பெயர். இறத்தல்-சாதல்.
 

1