பக்கம் எண் :

204

  நீதி நூல்
 
 
தண்டாத காலமதை யளவிடுவோம்
   இன்னுமிகு சமர்த்துஞ் செய்வோம்
கொண்டாடுந் தேகமிது வீழ்காலம்
   அறிவதற்கோர் குறிப்பின் றம்மா.
  பல்வேறு உலக உருண்டைகளின் தொலைவு, நிலை, சுற்றளவு முதலிய பிறவும் வகைப்படுத்துச் சொல்லுவோம். ஞாயிறு திங்கட்கு உண்டாகும் நில நிழலாம் கிரகணத்தை முன் ஆய்ந்து உரைப்போம். நாழிகை வட்டிலைக் கொண்டு காலக் கணக்கை வரையறுத்துக் கூறுவோம். மேலும் பல வியத்தகு செயல்களும் செய்வோம். விரும்பிப் பேணும் இவ்வுடம்பு எப்பொழுது மாளும் என்பதை உணர்வதற்கோர் அடையாளமுமின்று.
  அண்டம்-உலக உருண்டை. அருக்கன்-ஞாயிறு. கிராணம்-கிரகணம் பற்றுதல். கடிகாரம்-நாழிகை வட்டில். சமர்த்து-திறமை. தேகம்-உடம்பு. வீழ்காலம்-மாளும் பொழுது. குறிப்பு-அடையாளம்.
 

9

  உலகியற் பொருளெலாம் கூற்றுவன் உறுபசை
431
மண்டலத்தா ருயிர்வாங்க நமன்கொண்ட
   வாயுதத்தின் வகுப்பை நோக்கில்
கொண்டலிடி மின்னீர்கா லனன்மரங்கல்
   மண்ணோய்மீன் கொடிய புட்கள்
உண்டிவிலங் கின்பதுன்பம் பகையச்ச
   மூர்வனபே யுலகி லின்னுங்
கண்டதெல்லா மவன்கையா யுதமென்னிற்
   றப்பும்வகை காணோ நெஞ்சே.
  நெஞ்சே! உலகிலுள்ளார் உயிரை எடுத்துக் கொண்டு செல்லக், கூற்றுவன் கையாளும் கருவிகள் பலவாம். அவை மழை, இடி, மின்னல், வெள்ளம், நீர்நிலை, காற்று, தீ, மரம், மலை, மண், நோய், மீன், கொடும் பறவை, உணவு, விலங்கு, இன்பம், துன்பம், பகை, நடுக்கம், ஊர்ந்து செல்லு முயிரினங்கள், பேய் முதலிய உலகத்திற் காணும் பொருள் முற்றும். ஆயின், நாம் தப்பும் வகை எப்படி?
  நமன்-கூற்றுவன். கொண்டல்-மழை. கால்-காற்று. அனல்-தீ. கல்-மலை. புள்-பறவை.
 

10