| துன்பம் |
| ஓட்டைக் குடநீர்போல் உடலுயிர் உறல் வியப்பு |
449 | பஃறு ளைக்கடம் பாணியைத் தாங்குவ தரிதே எஃகு பஃறுளைச் சடத்துயி ரிருக்கையு மியைசீர் அஃகிப் பல்பட ரணுகுறா மையுமதி சயமாம் இஃது னார்துயர்க் கிடைந்துறு வாரிறும் பூதே. |
|
| பல துளைகளையுடைய குடமானது தண்ணீரை ஒழுகவிடாது தன்னகத்து வைத்துக்கொண்டிருப்பதே அருமையாகும். அதுபோல் நுண்ணிய பல ஓட்டைகளையுடைய உடம்பகத்தும் உயிர் தங்கியிருப்பதும், நெருங்கிப் பலவகைத் துன்பங்கள் சேராதிருப்பதும் வியத்தற்கு உரியன. இதைச் சிறிதுங்கருதாது துன்பத்திற்கு மனந்தளர்ந்து வருந்துவார் செய்கை வியப்புத் தருவதேயாம். |
| பஃறுளை-பல துளை. பாணி-தண்ணீர். எஃகு-நுண்மை.சடம்-அறிவில்லது; உடல். படர்-துன்பம். இறும்பூது-வியப்பு; ஆச்சரியம். |
| 12 |
| வேறு |
| வேண்டுவார்க்கு வேண்டுவ தருள்வோன் மெய்ப்பொருள் |
450 | நில்லாத செல்வம் அறவோர் வெறுக்கும் நிலையாலும் வான்கதி யையவ் வல்லார் விரும்பும் வகையாலும் அற்ப மகிவாழ்வு அவர்க்கி றைதரான் வில்லாரு முத்தி விழையா தவர்க்கு விழலன்ன வாழ்வை யருள்வான் ஒல்லார் விரும்பு பொருள்தந்து வெல்லும் ஒருநீதி வேந்தன் அனையான். |
|
| இரக்கமும் ஈகையும் முறைமையும் அமைந்த சான்றவர் செல்வத்தின் நிலையாமை கண்டு அதனை வெறுத்தலும், நிலைத்த வானோர்க்குயர்ந்த மேனிலையை-கடவுளடியை-விரும்புதலும் செய்வதால், ஆண்டவன் புற்பனிபோல் அழியும் உலகியற் சிறுவாழ்வை அவர்க்கு அருளான். அழியா ஒளிமிக்க வீடுபேற்றை விரும்பாதவர்க்குப் பயன் இல்லாத அவர் விரும்பிய உலக வாழ்வை அருள்கின்றான். இது, வேந்தர் பொருள் அவாக்கொண்ட பகைமன்னர்க்கு அவர் விரும்பியவாறு பொருள் கொடுத்து அப்பகைமையை வெல்லும் முறைமையாம். |