| நீதி நூல் |
| கற்பதன்முன் னரிதெனினும் பின்னெளிதா மதுபோனற் கரும மென்னும் அற்புதநூல் முயலுவோர்க் கெளிதாகு மதையடைவா யறிவி னெஞ்சே. |
|
| கல்தச்சு நூல் இலக்கண நூல் மருத்துவ நூல் நாவாய் நூல் போர் நூல் முதலிய பலவகை நூல்களை யுணர்வதினும் புண்ணியநூல் உணர்வது வருத்தமாகாது. சொன்ன நூல்கள் படிப்பதன் முன் வருத்தமாக இருந்தாலும் படித்தபின் எளிதாவது போன்று சிறந்த புண்ணியநூலும் முயன்று கற்று நடப்பார்க்கு வருத்த மில்லாததாகும். நெஞ்சமே! புண்ணிய நூலைக் கைக்கொள்வாயாக. |
| சிற்பம்-கல்தச்சு. வைத்தியம்-மருத்துவம். மரக்கலம்-தோணி; கப்பல்; நாவாய். |
| 3 |
| நாள் செல வென்பது நம்முயிர்ச் செலவே |
455 | தினங்கள்செலச் செலவேதோ பெற்றதுபோன் மகிழுநெஞ்சே தினங்க ளோடுங் கனங்கொளுமுன் னாயுள்நாள் கழிவதுண ராயுயிர்தீர் காயஞ் சேரும் வனங்கடுகி வாவென்ன விளித்துன்பால் தினநெருங்கும் வன்மை யுன்னி முனங்கொளறி யாமையைநீ யினங்கொள்ளா தறஞ்செய்ய முயலு வாயே. |
|
| நாட்கள் கழியக் கழிய ஏதோ புதிது பெற்றதுபோல் உளமுவக்கும் மனமே! நாள்கள் செல்வதுடன் அரிய நின் வாழ்நாளும் சென்றுகொண்டிருப்பதை உணராதிருக்கின்றாய். உயிர்நீங்கிய உடம்பினைச் சுடப்படுங் காடு, உன்னை நாள்தோறும் நெருங்கி விரைந்து வா என்று அழைக்கின்றது. அதை நினைந்து இதுவரையுங் கொண்டுள்ள அறியாமையை இன்னமுங் கொள்ளாது விரைந்து புண்ணியஞ் செய்ய முற்படுவாயாக. |
| தினங்கள்-நாள்கள். கனம்-அருமை. ஆயுள்-வாழ்நாள். காயம்-உடம்பு. வனம்-சுடுகாடு. கடுகி-விரைந்து. விளித்து-அழைத்து. முயலுவாய்-முற்படுவாய். |
| 4 |