| நீதி நூல் |
| அரியபொருள் வெளியிட்டுச் செப்பினைக்காத் திடல்போலு மான்மா வுக்கே உரியவறம் புரியாமல் உடலினைநீ யோம்புகின்றா யுள்ளப் பேயே. |
|
| நெஞ்சமே! குதிரை ஏறி வருபவனைப் பணியாது குதிரைக்கு மிகப் பணிதலும், முழுமுதற் கடவுளை வழிபட்டுச் சிறப்புச் செய்யாது திருக்கோவிலை அணி செய்யும் பித்தர் செயலும், சிமிழினுள் இருந்த அருமணியை வெளியே தள்ளிவிட்டு வெறுஞ்சிமிழைக் காக்கும் காவலும் எப்படிப் பயன் இல்லாது வீணாகுமோ, அப்படியே நீயும் சிறந்த வுயிரை உணர்வு ஒழுக்கம் அறங்களாற் பேணாது உடலை ஊண் உடை அணிபூச்சு முதலியவற்றால் பேணுவதும் வீணாகும். |
| பரி-குதிரை. உபசாரம்-பணிவிடை. செப்பு-சிமிழ். ஓம்புதல்-பேணுதல். |
| 10 |
| இறந்தவர்க்காய் யாரும் இறந்திடல் செய்யார் |
462 | ஓருயிரீ ருடலென்ன நட்டமைந்தர் மாதர்நம துயிர்நீங் கிற்றம் ஆருயிரைத் துறப்பரோ அழுவதுந்தம் முணவுவைக்க அமைந்த பாண்டம் பேருலகி லுடைந்ததென அழுவதன்றி நமக்கிரங்கும் பேரிங் குண்டோ சாருமிவர் நேயமதாற் பவஞ்செய்து வீடிழத்தல் தகுமோ நெஞ்சே. |
|
| மனமே! ஓர் உயிர்க்கு ஈர் உடல்போன்று வேற்றுமையின்றிக் காதல் கொண்டு ஒழுகிய பிள்ளைகளும் மனைவியும் நம் உயிர் நீங்கினால், அவர்களுடைய அரிய ஆவியை விட்டுவிடுவாரோ? விடார். நம் பிரிவுக்காக அழுவதும், தங்களுக்கு வேண்டிய உண்வின் கொள்கலமாகிய பொருள் உலகில் உடைந்து விட்டதே என்னும் வருத்தத்தாலேயாம். அவ்வாறல்லாமல், நமக்காக வருந்துபவர் ஒருவரும் இலர். இப்படிப்பட்டவர்கள் சார்பில் வரும் அன்பினால் அவர்களைப் பேணற் பொருட்டுப் பாவஞ் செய்து கடவுளின்பத்தை இழத்தல் பொருந்துமா? பொருந்தாது. |
| நேயம்-அன்பு. பவம்-பாவம். வீடு-கடவுளின்பம். |
| 11 |