| அறஞ்செயல் |
| பாழ் நரகினுக்கீ றில்லைப் பரகதி நிலையும் அற்றால் தாழ்நர கறவீ டெய்தத் தருமத்தைத் துணைக்கொள் நெஞ்சே. |
|
| மனமே! சக்கரம்போல் சுற்றிவரும் பல ஊழிகட்கு ஒவ்வொரு திவலையாகக் குறைந்து கடல்நீர் முற்றும் வற்றி அழிந்தாலும், பாவம் செய்து பழி எய்தும் கொடியோர் வீழ்ந்து சொல்லொணாத் துன்பம் எய்தும் குற்றம் நிறைந்த துன்ப உலகம் அழிவதில்லை. அதுபோலவே, புண்ணியம் செய்து புகழெய்தும் நல்லோர் சென்று இன்பமெய்தும் சிவநிலையும் அழிவதில்லை. இழிந்த இருள்நிலை நீங்கச் சிறந்த சிவநிலை எய்த விழுமிய அறத்தொண்டினைக் கைக்கொள்வாயாக. |
| சூழ்-சுற்று. உகம்-ஊழி; உலக முடிவு. துளி-திவலை. பாழ்-குற்றம். ஈறு-அழிவு. பரகதி-சிவநிலை. தாழ்-இழிவு. |
| 22 |
| அறவழியிற் செல்வார் விரும்பார் அழிபொருள் |
474 | தாகமே உடையார் வேலைச் சலமருந் தினும்பொன் மீது மோகமே யுடையார் மண்கல் முதல்கரங் கொளினும் தேவ போகமே புரிந்து இல்லாமை பூண்டபுண் ணியர்வா னத்தூர் மேகமார் மின்னின் நில்லா விருத்திமேல் அருத்தி கொள்ளார். |
|
| நீர் வேட்கையுள்ளவர் எதுவும் பருகாத உப்புமிகுந்த கடல் நீரைக் குடித்தாலும், பொன்னின்மேல் மிகுந்த மயக்கங் கொண்டவர்கள் மண்ணையும் கல்லையும் பிறவற்றையும் கைக்கொண்டாலும், கடவுளின்பமே விழைந்து நல்லற வழியில் நடப்பவர் வறுமையுற்றாலும், விண்ணிடைச் செல்லும் மேகத்தில் தோன்றும் மின்னலை ஒத்த நிலையில்லாத செல்வத்தினிடத்துச் சிறிதும் பற்றுக் கொள்ளார். |
| தாகம்-வேட்கை. வேலை-கடல். மோகம்-மயக்கம், கரம்-கை. போகம்-இன்பம். விருத்தி-செல்வம். அருத்தி-பற்று. |
| 23 |