பக்கம் எண் :

24

 நீதிநூல்
 
 கடவுளைத் தொழுவோர் காண்பர்பே ரின்பே
32
மாசறு கடவுள் பாத மலரினைத் தினமும் போற்றிப்
பாசமில் சுகம்பெ றாமற் பவஞ்சத்தூ டுழலல் பைம்பொன்
ஆசனந் தன்னிலேறி யரசுசெய் தகைமை நீத்துக்
காசனக் கழுவி லேறுங் கயமையே கடுக்கு மாதோ.
  ஆண்டவன் திருவடியை நாளும் தொழுது துன்பமில்லாத இன்பத்தை எய்தாமல் உலகில் அலைதல், உரிய அரசிருக்கையில் இராமல் கொலைக்கழுவில் ஏறுவதை யொக்கும்.
  காசனம்-கொலை. கடுக்கும்-ஒக்கும். பவஞ்சம்-உலகு.
 

16

 கடவுளைத் தொழா உறுப்புக் கல்மண்தீ யாமே
33
போதநா யகனை யுன்னாப் புந்தியே வெந்தீ யொப்பாந்
தாதல ரடிவ ணங்காத் தலைகுலை சிலையாஞ் சீர்சான்
மாதலத் தவனை வாழ்த்தா வாயது தூயதன்று
காதலன் பொடுநீர் தூவாக் கண்களே புண்க ளாமால்..
  அறிவு உருவான ஆண்டவனை எண்ணாதநெஞ்சம் தீ; அடிவணங்காத் தலை உடைகல்; வாழ்த்தா வாய் மாசுடையது. இன்ப நீர் பெருக்காத கண் புண் ஆகும்.
  போதம்-அறிவு.
 

17

 எல்லாம் இன்பெய்தக் கடவுளை ஏத்தும்
34
கதிரவன் கிரணக் கையால் கடவுளைத் தொழுவான் புட்கள்
சுதியொடும் ஆடிப் பாடித் துதிசெயுந் தருக்க ளெல்லாம்
பொதியலர் தூவிப் போற்றும் பூதந்தந் தொழில்செய் தேத்தும்
அதிர்கட லொலியால்வாழ்த்தும் அகமே நீ வாழ்த்தா தென்னே.
 கடவுளைக் கதிரவன் தன் கதிர்க்கையால் தொழுகின்றான். பறவைகள் குரலெடுத்து ஆடிப் பாடிப் போற்றும். மரங்கள் மலர் தூவிப் போற்றும். பூதங்கள் தொழில் செய்து ஏத்தும். கடல் ஒலியால் வாழ்த்தும். நெஞ்சமே நீ வாழ்த்தாத காரணம் என்ன?
 

18