பக்கம் எண் :

25

 தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
 
  எல்லாம் காக்கும் இறையே மேலாம்
35
அறிவிலா ரரச ரென்றற் கமைச்சரே சான்றாம் அன்னோர்
செறிபெருந் தானை யான்மெய்த் திறலிலா ரெனவ றிந்தோம்
வரியரென் றிறையி ரக்கும் வாய்மையா லறிந்தோ மென்று
நெறிவழா துலகந் தாங்கு நிருபனைத் துதியாய் நெஞ்சே.
  நெஞ்சே அரசருக்கு அறிவும் வலிமையும் செல்வமும் இல்லை என்பது, முறையே அமைச்சர் படை வரிவாங்கல் முதலிய துணைகளால் அறிகின்றோம். உலகெலாம் காப்பவன் ஆண்டவன் ஒருவனே. அதனால், அவனைப் போற்றுவாயாக.
  தானை-படை. திறல்-வலிமை. இறை-வரி.
 

19

 எங்குந் தங்கி இயற்றுவோன் கடவுள்
36
இரவினும் மற்றோர் பாரா இடையினும் பாவஞ் செய்வாய்
கரதலா மலகம் போல்முக் காலமும் உணர்வோன் எங்குந்
தரமொடு வீற்றி ருக்குந் தன்மையெள் ளளவும் ஓராய்
பரனிலா இடமொன்றுண்டேல் பவமவண் செய்நீ நெஞ்சே.
  நெஞ்சமே இரவிலும் பிறர்காணா இடத்திலும் பாவஞ் செய்கின்றாய். ஆண்டவன் எங்குமிருக்கின்றான். அங்கை நெல்லிபோல் முக்காலமும் உணர்கின்றான். இவற்றை அறிந்தால் ஆண்டவன் இல்லாத இடமிருந்தால், அவ்விடத்து நீ பாவஞ்செய்.
  கரதலாமலகம்-அங்கை நெல்லி. கரதல ஆமலகம்.
 

20