| விலங்கினத்துக் கிடர் செய்யாமை |
| விலங்கினை வாட்டுவோர் மக்களையும் வாட்டுவர் |
520 | ஊமரைப் பித்து ளாரை யுணர்வில்சே யரைமின் னாரைப் பாமரர் தம்மை மிக்க பரிவொடுங் காத்தல் போல நாமற விலங்கைக் காப்பர் நல்லவ ரதைவ ருத்துந் தீமன முடையோர் துன்பஞ் செய்வர்மா னிடர்க்கு மம்மா. |
|
| ஊமைகளை, பித்துக் கொண்டோரை, அறிவு நிரம்பாத பிள்ளைகளை, மாதரை, அறிவிலாப் பெருமக்களை மிகுந்த இரக்கத்துடன் பாதுகாப்பதுபோல, நல்லவர், அச்சம் நீங்கும்படி விலங்கினங்களைக் காப்பர். அவ் விலங்கினங்களைத் துன்புறுத்தும் கொடுமனம் உடையோர், அப் பழக்கத்தால் மக்களுக்கும் துன்பஞ் செய்வர். |
| நாம்-அச்சம். |
| 4 |
| புலாலுண்போர் தெய்வத் தண்டனை அடைவர் |
521 | காயிலை கிழங்கே தக்க கறியதா மதனை யுண்போர் ஆயுள்நாள் வளரும் ஊழ்த்தல் அருந்துவோ ருயிர்கட் கெல்லாந் தாயெனு மொருக ருத்தன் சாபத்தைப் பரிப்பா ரென்னிற் பேயினுங் கொடிய வன்னார் பிழைக்குமா றெவன்கொ லம்மா. |
|
| மக்கள் உண்பதற்கு வாய்ப்புடைய காய், இலை, கிழங்கு, பருப்பு, கூலம், கறி, பழம் முதலிய மழையால் தரப்பெறும் தூய உணவே பொருந்தியதாகும். அவ்வுணவை உண்போர்க்கு வாழ்நாளும் வளரும். கொலையால் வரும் புலால் என்னும் இறைச்சியை உண்போர் எல்லா உயிர்கட்கும் தாயென்று பேசப்பெறும் ஒப்பிலா முழுமுதல்வனின் கடுந்தண்டனையை அடைவர். ஆயின்-ஐயோ! பேயினும் கொடிய அவர்கள் எவ்வாறு உய்வர்? |
| ஊழ்த்தல்-இறைச்சி. சாபம்-கடுந்தண்டனை. பரிப்பர்-அடைவர். பிழைத்தல்-உய்தல். |
| 5 |