பக்கம் எண் :

256

  நீதி நூல்
 
 இரக்கமிலாது விலங்குக்கு இடர்விளைப்போன் நெஞ்சம் இரும்புகல்
522
பற்றிநோய் செயப்பின் பற்றும் பதகரை வெரீஇவி லங்கு
சுற்றியே யோடுங் கத்தும் துன்புறும் வயிற்றைக் காலால்
எற்றிவீழ்ந் தெழும யங்கும் என்செயும் இவ்வி லங்கை
முற்றிய சினத்திற் பற்று மூர்க்கர்நெஞ் சிரும்போ கல்லோ.
  விலங்கினங்களைப் பிடித்துத் துன்புறுத்தத் தொடரும் அறிவிலாக் கொடியோரைக் கண்டு அவை நடுநடுங்கி ஓடும்; கதறும்; பொறுக்க முடியாத துன்பத்தை அடையும். வயிற்றில் காலால் அடித்துக் கீழ்விழும்; எழுந்து கலங்கும்; இவையன்றி வேறு என்ன செய்யும்? இத்தகைய விலங்கைச் சிறிதும் இரக்கமில்லாது முதிர்ந்த சினக் கொடுமையால் பற்றும் கொடியோர் நெஞ்சம் இரும்போ? கல்லோ?
  பதகர்-அறிவிலார். மூர்க்கர்-கொடியோர்.
 

6

  ஊனுண்போர் தமைப்புலி உண்ண ஒப்புவரோ
523
எமக்குண விலங்கைப் புள்ளை
    யிறைசெய்தா னெனக்கொன் றட்டுச்
சுமக்கரி தாக வுண்டு
    பாழ்ங்குழி தூர்க்கா நின்றீர்
தமக்குண நும்மை யீசன்
    சமைத்தனன் எனப்புல் சீயம்
அமர்க்கரி யாதி யும்மை
    அடித்துணின் என்செய் வீரால்.
  எங்கட்கு உணவாக உண்ண விலங்கினங்களையும், பறவைகளையும் ஆண்டவன் படைத்தான் என்று பொருந்தாவுரை புகன்று, கொன்று சமைத்து வயிறு சுமக்க முடியாதபடி விலாப்புடைக்க உண்டு பாழான வயிற்றைத் தூர்க்கின்றவர்களே! தங்கட்கு உணவாக உண்ணும்படி உங்களைப் படைத்தான் பரமன் என்று புலி சிங்கம் காட்டுப்பன்றி முதலிய கொடு விலங்குகள் கூறி உங்களைக் கொன்று உண்ணுமானால் என்ன செய்வீர்கள்?
  புல்-புலி. சீயம்-சிம்மம். அரி-காட்டுப்பன்றி.
 

7

                        --------