பக்கம் எண் :

27

  அரசியல்பு
 
  நல்லோரால் அரசு நடத்துவோன் மன்னன்
39
தாயறி யாத சேயிருந் தாலுந்
   தானறி யாதவ ரில்லை
ஆயதன் மையினால் அறவழி நிற்கும்
   அறிஞரை யறிந்தவர்க் குரிய
தேயவா திக்கந் தந்துநன் னீதி
   செலுத்தியெங் கணுமருந் தினுக்குந்
தீயவ ரிலரென் றிசையுற மடக்குந்
   திறலுளோன் பூதல வேந்தே.
  எல்லாக் குடிகளையும் தானறிந்து, நல் அறிவாளரைக் கொண்டு அரசு நடத்தித், தீயவர் பெயருமில்லாமல் நீக்கிப் புகழுடன் ஆள்வோன் மன்னன்.
  இசை-புகழ். திறல்-வலிமை.
 

3

  தானும் குடிகளும் சமனென்போன் வேந்தன்
40
தன்புகழ் கருதி மருவல ரோடுஞ்
   சமர்புரிந் துயிர்களை மாய்த்துத்
துன்பமே செய்ய வியைந்திடான் முற்போர்
   தொடுத்திடான் றன்னுயி ரனைய
மன்பதை கிடுக்கண் யாவரே செயினும்
   வாளம ரியற்றிநீக் கிடுவான்
இன்பதுன் பங்கள் தனக்குமற் றவர்க்கும்
   ஏகமென் றெண்ணுவோன் வேந்தே.
  வலியப்போர் செய்து உயிர்கள மாள மனம் இணங்காமை, உயிர்களைத் துன்புறுத்தும் மன்னனை வலிந்து போர்செய்து மடக்குதல், இன்பதுன்பம் குடிகளுக்கும் தனக்கும் சமமாகக் காண்டல் ஆகிய தன்மையன் வேந்தன்.
  வேந்தன்-முடியுடைமன்னன்.
 

4