பக்கம் எண் :

272

  நீதி நூல்
 
  ளங்கொண்டு பொருத்தமான இடத்து அஞ்ஞாயிற்றை அமைத்து எல்லா வுலகமும் ஒளியும் சூடும் எய்தி அளியொடும் வாழ அருளினவன் ஒப்பில்லா முழுமுதல்வனாவன்.
  பகல்-ஞாயிறு. அணித்து-நெருக்கம். சேண்-தொலைவு. பார்-உலகம். உன்னி-திருவுள்ளங்கொண்டு. நிகரிலான்-ஒப்பில்லான்.
 

8

  திங்களைத் திகழ்வுறச் செய்தோன் கடவுள்
551
மதிபுவி யென்வோர் கோள வடிவமா மஃது காந்தி
கதிரிடம் பெறுமச் சோமன் புவியைச்சுற் றுங்கா லென்றூழ்க்கு
எதிருறா தொளித்த லாலே யிருளுறு மீண்டுஞ் சோதி
பதிவுறு மினைய திங்கள் பண்ணினோன் விண்ணின் கோனே.
  திங்களாகிய அம்புலி உலகம்போன்ற ஓர் உண்டை வடிவமான பொருள். அது, ஞாயிற்றினிடம் ஒளிபெற்று நமக்கு நிலவொளி தருகின்றது. அஃது உலகத்தைச் சுற்றிவருகின்றது. அப்படி வரும்பொழுது ஞாயிற்றின் நேர்வராமல் மறையும் காலமே உவா நாளாகும். நேர்படும் பொழுதுமீண்டும் ஒளிபெறும். இத்தகைய திங்களைப் படைத்தருளினோன் விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விழுமிய தலைவனாவன்.
  மதி-திங்கள். புவி-உலகம். கோளம்-உண்டை. காந்தி-ஒளி. என்றூழ்-ஞாயிறு. உவா-அமாவாசை.
 

9

  உலகுருண்டு சுற்றக் காலம் உறுவித்தோன் கடவுள்
552
பாரிரு புறத்துஞ் சோதி படவப்பார் தினம் புரண்டு
சூரியற் கெதிராய்ப் பின்னும் சுழன்றுவிண் சென்றோ ராண்டிற்
பேரிர வியையே சுற்றக் காலபே தங்க ளாமிச்
சாரியல் பார்செய் தோன்தாள் தலையுறார் நிலையு றாரே.
  உலகத்தின் மேலும் கீழுமாகிய இரண்டு பக்கத்தும் ஞாயிற்றின் ஒளி படும்படி அவ்வுலகம் நாள்தோறும் உருண்டு ஞாயிற்றின்முன் வருகின்றது. மேலும், அஞ்ஞாயிற்றைச் சுற்றிக்கொண்டும் வருகின்றது. அங்ஙனஞ் சுற்ற ஓர் யாண்டாகும் இதனால் நாளும் திங்களும் பருவமும் யாண்டும் வரையறுத்து வழங்கி வருகின்றோம். இவ்வாறு அருளிச்செய்த கடவுளின் திருவடிகளைத் தலையிற் கொள்ளாதார், பேரா இயற்கைப் பேரின்பப் பெருவாழ்வெய்திப் பிறவா நிலையுறார்.
  10