பக்கம் எண் :

277

  தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
 
 
அயிலல்வா ழுறையுள்செய்தல் அணைந்தினம் பல்கல் மற்றைச்
செயிரறு தொழில்க ளெல்லாஞ் செயப்படிப் பித்தோன் யாரே.
  உயிருய்வதற்குத் தக்க வழிகளை நாம் ஒருவரை யொருவர் பார்த்துங் கேட்டும் பழகி வருகின்றோம். ஆனால், பறவை விலங்கு முதலிய சிற்றுயிர்கள் இரைதேடி விழுங்கலும், கூடு முதலிய இருக்கை யமைத்தலும், ஆண், பெண் இணைந்து மருவி இனம் பல்கச் செய்தலும் பிறவும் தாமாகவே செய்துகொள்ளும்படி ஆற்றல் அமைத்தவன் யாவன்? அவனே முழுமுதற் கடவுள்.
  உய்ய-பிழைக்க. உபாயம்-வழி. பயிலுவோம்-பழகுவோம். அயிலல்-விழுங்கல். உறையுள்-இருக்கை. இனம்-கூட்டம்.
 

19

  எட்டா வெளியாய் இன்பமாய் இலங்குவோன் கடவுள்
562
முத்தர்பே ரின்ப வாழ்வை
    மொழிமனக் ககோச ரத்தைப்
பத்தர் பாக்கியத்தைப் பாவப்
    பகையினைத் தகையின் வைப்பை
வித்தக வொளியை யின்ப
    விளைவினை யருட்பௌ வத்தை
உத்தம குணாக ரத்தை
    யுளங்கொளார் வளங்கொ ளாரால்.
  அவாவறுத்த முனிவர்களுக்கு அழியாப் பேரின்ப வாழ்வு கடவுள். மனங் கழிய நின்ற மறைபொருள் கடவுள். பேரன்பினராகிய பக்தர்களின் பேரும்பேறு கடவுள். மீளா நிரயத்துக்கும் அதன் வழி வாளாப் பிறப்புக்கும் ஆளாக்கும் பாவப் பகைவன் கடவுள். அளவிலா அழகின்நிலையம் கடவுள். செயற்கரும் செயல் செய்யும் சீரியோர் உள்ஒளிகடவுள். தெவிட்டா இன்பச்செல்வன் கடவுள். பேரருட் பெருங்கடல் கடவுள். எல்லாச் சிறந்த பண்புகளின் உறைவிடம் கடவுள். இத்தகைய நன்மை வாய்ந்த கடவுளை நாளும் உளங்கொண்டு வழுத்தாதார் சிறப்பும் செல்வமுமாகிய வளம்பெற்று வாழார்.
  முத்தர்-முனிவர். அகோசரம்-எட்டாதது. பாக்கியம்-பெரும்பேறு. தகை-அழகு. வித்தகம்-அருஞ்செயல். பௌவம்-கடல். குணாகரம்-பண்பின் உறைவிடம்.
 

20